பலி ஆடாக இருந்து உயிர் பிழைத்துள்ளேன்! நடிகர் திலீப் வழக்கு குறித்து நடிகை பாவனா வெளியிட்டுள்ள அறிக்கை
பிரபல திரைப்பட நடிகையான பாவனா நடிகர் திலீப் மீதான வழக்கு குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை காரில் கடத்தப்பட்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக நடிகர் திலீப், பல்சர் சுனி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
74 நாட்கள் சிறையில் இருந்த திலீப், ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
சில நாட்களுக்கு முன் நடிகர் திலீப்பின் நண்பரும் மலையாள இயக்குனருமான பாலசந்திரகுமார் இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்க்கு உள்ள தொடர்பு குறித்து பல தகவல்களை வெளியிட, இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இயக்குனர் பாலசந்திர குமாரும், நடிகையும் கேரள முதல்வருக்கு கடிதம் எழுத விசாரனை முடுக்கி விடப்பட்டது. வரும் ஜனவரி மூன்றாம் வாரத்திற்குள் விசாரணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையை வரும் பெப்ரவரிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை பாவனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது எளிதான பயணம் அல்ல. பலி ஆடாக இருந்து தப்பிப்பிழைக்கும் பயணம் இது. ஐந்து ஆண்டுகளாக, என் பெயரும் எனது அடையாளமும் என் மீது சுமத்தப்பட்ட தாக்குதலின் பாரத்தால் அடக்கப்பட்டுள்ளன.
குற்றம் செய்தது நான் இல்லை என்றாலும், என்னை அவமானப்படுத்தவும், அமைதியாகவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில் என் குரலை உயிர்ப்புடன் வைத்திருக்க சிலர் முன்வந்திருக்கிறார்கள். இப்போது எனக்காகப் பல குரல்கள் பேசுவதைக் கேட்கும்போது, நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரியும்.
நீதி நிலைநாட்டப்படவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், வேறு யாரும் இதுபோன்ற சோதனைக்கு ஆளாகாமல் இருக்கவும் இந்தப் பயணத்தைத் தொடர்கிறேன். என்னுடன் நிற்கும் அனைவருக்கும் உங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.