விவேக் உயிரோடு இருந்திருந்தா ஓடி வந்து உதவியிருப்பார்! வேதனைப்பட்ட போண்டா மணி.. வடிவேலு கூறிய பதில்
யாருமே உதவவில்லை என வேதனைப்பட்ட சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் போண்டா மணி.
அவர் பேட்டியை தொடர்ந்து நடிகர்கள் உதவ தொடங்கியுள்ளனர்.
இலங்கை தமிழரான நடிகர் போண்டாமணியின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழர் திரையுலகில் இருந்து பணம் கிடைக்க தொடங்கியுள்ளது அவரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்தவர் கேதீஸ்வரன் என்ற போண்டா மணி. தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக ஜொலித்து வந்த போண்டா மணிக்கு 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நடிகர்கள் யாரும் தனக்கு உதவில்லை எனவும், நடிகர் விவேக் இருந்திருந்தா இந்நேரம் ஓடோடி வந்து உதவி செஞ்சிருப்பார், என் கூடப் பொறந்தவங்க எல்லாரும் இலங்கையில் உள்ளனர். அவர்கள் இங்க வந்து சிறுநீரக தானம் கொடுக்கிற சூழல் இல்லை.
என் மனைவி அவங்களுடைய சிறுநீரகத்தை தருவதாக சொல்றாங்க.. மருத்துவர்கள் அதற்கு இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை என்றார். இந்நிலையில், ஓமந்துரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போண்டா மணியை, அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது அவர், போண்டா மணிக்கு சீறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தற்போது டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.
அவரது உறவினர்கள் யாராவது சிறுநீரகம் தானம் செய்வார்களா என்று விசாரிக்க சொல்லி உள்ளோம். கிடைக்காத பட்சத்தில் அரசு விதிகளின் படி அவருக்கு சிறுநீரகம் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதற்கான செலவு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் செய்யப்படும். அவருக்கு வேண்டிய சிகிச்சை அரசு சார்பில் செய்யப்படும் என்றார்.
இந்த சூழலில் நடிகர் பார்த்திபன் போண்ட மணியின் அன்றாடத் தேவைக்கு வேண்டிய பண உதவியை தன்னுடைய மனிதநேய மன்றத்திலிருந்து செய்துள்ளதாகவும், மேலும் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்வேன் எனவும் கூறியுள்ளார்.
இன்று போண்டா மணி கூறுகையில், நடிகர் விஜய் சேதுபதி ரூ. 1 லட்சம் வழங்கினார், வடிவேலு உதவி செய்வதாக கூறியுள்ளார். அமைச்சர் மா.சுப்ரமணியன் அரசு சிகிச்சை செலவை ஏற்படும் என தெரிவித்தார். நான் சம்பாதித்தது இது தான், அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
சற்று முன்னர் வடிவேலுவிடம் போண்டா மணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, போண்டா மணிக்கு என்னால் இயன்ற உதவி செய்வேன் என பதிலளித்துள்ளார்.