விவேக்கால் இந்த இரண்டு விஷயங்களை தாங்கவே முடியாது! வேதனையுடன் சொன்ன நடிகர் சார்லி
நடிகர் விவேக் மறைவால் மிகுந்த வேதனையடைந்த சார்லி, விவேக்கால் தாங்க முடியாத இரண்டு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விவேக்கின் மறைவிற்கு ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறது.
அந்த வகையில், விவேக் மறைவிற்கு சென்ற நடிகர் சார்லி, மிகுந்த வேதனையுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, விவேக்க இரண்டு விஷயங்களை தாங்கவே முடியாது. அதில் ஒன்று ஒருவர் முன் ஒருவரை அவமானப்படுத்துவது, இரண்டாவது மற்றவர்களுக்கு கஷ்டம் என்றால் அவரால் தாங்க முடியாது.
எங்கள் காமெடி நடிகர்களிலே அவர் தான் ஒரு ஹீரோ, அவரது இழப்பு சினிமாவுக்கும் தமிழகத்திற்கும் இழப்பாக இருக்கலாம்.
ஆனால், எனது குடும்ப நண்பனை நான் இழந்தது தனிப்பட்ட இழப்பு. எதையாவது சொல்லி எதையாவது ஈடுகட்டுவதற்கான இழப்பல்ல.
அடிக்கடி நாங்க இரண்டுபேரும் சந்திக்கும் போது, அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்ற பாடலை பாடுவோம்.
அதிலும், குறிப்பாக பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா என்பது தான் அவருக்கு பிடித்த வரி, ஆனால் இன்று எங்களை எல்லாம் பதறவைத்து விட்டு போய்விட்டார் என்று கூறி முடித்தார்.