கொல்லப்பட்ட டென்னிஸ் வீராங்கனையுடன் காதலா? வீடியோ வைரலான நிலையில் நடிகர் விளக்கம்
ராதிகா யாதவ் உடன் நடித்த வீடியோ வைரலான நிலையில், நடிகர் இனாம் உல் ஹக் விளக்கமளித்துள்ளார்.
கொல்லப்பட்ட டென்னிஸ் வீராங்கனை
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்(25), அவரது தந்தையால் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது தந்தை தீபக் யாதவை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மகளின் வருமானத்தில், வாழ்ந்து வருவதாக சமூகத்தால் கேலி செய்யப்பட்டதாகவும், இதனால் கடந்த 15 நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் இனாம் உல் ஹக் உடன், மறைந்த ராதிகா யாதவ் நடித்த இசை வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து, இருவரும் காதலித்து வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் பலரும் விவாதிக்க தொடங்கினர்.
நடிகர் விளக்கம்
இதனை தொடர்ந்து இது குறித்து விளக்கமளித்துள்ள நடிகர் இனாம் உல் ஹக், "டெல்லியில் நடைபெற்ற டென்னிஸ் பிரீமியர் லீக்கில் நான் ராதிகாவை முதன்முதலில் சந்தித்தேன்.
அதன் பிறகு, நான் அவரை ஒரு மியூசிக் வீடியோவிற்காக சந்தித்தேன். நான் பல நடிகைகளுடன் பணியாற்றியுள்ளேன். அதே போல், என்னை பொறுத்தமட்டில் அவர் ஒரு நடிகை.
அதில் நடித்ததற்கு, அவளுக்கு ஒரு நல்ல தொகையைக் கொடுத்தோம். வீடியோவின் தயாரிப்புக்கு பணம் செலுத்தப்படவில்லை. அதன் பிறகு, நாங்கள் ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை.
எனக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து சமூக ஊடகங்களில் பொய்யான வதந்திகள் பரவி வருகிறது. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. நடிப்பை தாண்டி, ராதிகாவுக்கும் எனக்கும் இடையே எந்தவிதமான நட்போ அல்லது உறவோ இல்லை.
இது ஏன் ஹிந்து - முஸ்லீம் என்ற மத அடையாளத்துடன் விமர்சிக்கப்படுகிறது என புரியவில்லை. ராதிகா சமூக ஊடகங்களில் இல்லை. யூடியூப்பில் ஒரு வீடியோ மட்டுமே உள்ளது. அதனால்தான் அது மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
காவல்துறையினர் இன்னும் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை. விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைக்கத் தயாராக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |