பணத்தேவைக்காக அதனை செய்தேன், தற்போது வருத்தப்படுகிறேன்! தமிழ்ப்பட வில்லன் நடிகர்
ஒன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்காக தற்போது வருத்தப்படுவதாகவும், இனி அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கப்போவதில்லை எனவும் பிரபல மலையாள நடிகர் லால் தெரிவித்துள்ளார்.
ஒன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் பலர் தற்கொலை முடிவை எடுத்திருக்கின்றனர். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற ஒன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், பிரபலங்கள் இந்த விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என கண்டனக் குரல்கள் ஒலித்து வருகின்றன.
இந்த நிலையில் ஒன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்காக வருத்தப்படுவதாக பிரபல மலையாள நடிகர் லால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'கொரோனா ஊரடங்கின்போது பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டேன். அதனால் தான் ஒன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தேன். தற்போது அதற்காக மிகவும் வருந்துகிறேன். இனிமேல் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்' என தெரிவித்துள்ளார்.
தமிழில் சண்டக்கோழி, மருதமலை, தீபாவளி படங்களில் வில்லனாக நடித்திருந்த லால், கர்ணன் படத்தில் நடித்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக பெரிதும் பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.