ரூ.10 லட்சம் பணத்தை ஏமாத்திட்டாங்க! 3 வருடமாக வேலை இல்லை.. வருத்தத்தில் பிரபல காமெடி நடிகர்
பிரபல காமெடி நடிகரான லொள்ளு சபா மனோகர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் வருமானம் இல்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் முன்னணி நடிகர்கள் தவிர குணசித்திர நடிகர்கள் பலரும் ஏழ்மையின் பிடியில் சிக்கியுள்ளனர். அந்த பட்டியலில் லொள்ளு சபா மனோகரும் இடம் பிடித்துள்ளார்.
இவர் வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்தவர். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இவர் வங்கியில் தற்காலிக பணி மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, கொரோனா வருவதற்கு முன்பு மாதம் 30 நாளும் நான் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டு தான் இருந்தேன். இந்த மூன்று வருடங்களாக எனக்கு எந்த வேலையும் இல்லாமல் மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறேன்.
நானும் சந்தானம், வடிவேலு போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஆனால் என்னை தேவைக்கு மட்டும் பயன்படுத்தி கொள்கின்றனர்.
நாம் சேமிக்கும் பணம் மட்டுமே கடைசி வரை காப்பாற்றும். நானும் சிறுக சிறுக 10 லட்சம் ரூபாய் வரை சேர்த்து வைத்திருந்தேன். ஆனால் என்னை ஒருவன் ஏமாற்றிவிட்டார். இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருவதாக மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.