நடிகர் விவேக்குக்கு வந்த மாரடைப்பு தொடர்பில் சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன்! தடுப்பூசிக்கு 2 லட்சம் வழங்க உத்தரவு
நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார். மறுநாள் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் மக்களுக்கு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
அதாவது இதயத்தில் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவேக் தடுப்பூசி காரணமாகத்தான் இந்த நிலைமைக்குச் சென்றார் என்ற அவதூறு செய்தியை பேட்டியில் தெரிவித்தார்.
இதையடுத்து மன்சூர் அலிகான் பேச்சு அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதோடு கொரோனா தடுப்பூசி வாங்க 2 லட்சம் ரூபாயை தமிழக சுகாதாரத்துறைக்கு அவர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி குறித்து மன்சூர் அலிகான் புரளி பரப்பக் கூடாது, பதற்றத்தை உருவாக்கக் கூடாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.