நடிகை திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அவரது மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மான நஷ்டஈடு வழக்கு
நடிகை திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
தேசிய மகளிர் ஆணைய பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விடயத்தில் நடிகர் மன்சூர் அலிகானின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் நடிகை த்ரிஷாவும் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி உத்தரவு
இந்த மனு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நடிகை த்ரிஷாவின் தரப்பில், மூன்று பேருக்கு எதிராக ஒரே வழக்கில் தாக்கல் செய்யப்பட முடியாது என்றும், தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மன்சூர் அலிகான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்றும் தனது கருத்து எதிர்ப்பு கருத்து தான் என்றும் கூறினார்.
நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில், மூன்று பேருக்கு எதிராக ஒரே வழக்கில் தாக்கல் செய்யப்படலாம் என்றும் தான் பேசிய வீடியோவை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மூவரும் X வலைதளத்தில் தங்கள் கருத்தை பதிவை செய்திருப்பதாகவும், இதை அவதூறாக கருத முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் உரிமையியல் நடைமுறை சட்டப்படி மூன்று பேருக்கும் எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |