பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கொரோனா தொற்றுக்கு பலி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல திரைப்பட நடிகர் போளூர் ஜெயகோவிந்தன் சிகிச்சை பலனின்றி காலமானார்.
தமிழ் திரைப்பட நடிகரான போளூர் ஜெயகோவிந்தன் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்தார். இந்த நிலையில் கொரோனா பாதித்து அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, அ.தி.மு.க. இலக்கிய அணி இணைச்செயலாளரும், நட்சத்திரப் பேச்சாளருமான நடிகர் போளூர் ஜெயகோவிந்தன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணொத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.
தலைமை கழக நட்சத்திரபேச்சாளர் நடிகர் ஜெயகோவிந்தன் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.#RIP pic.twitter.com/LPn4cOuL7o
— AIADMK FAST NEWS TN (@FastNewsTN) June 19, 2021
அம்மாவின் பேரன்பைப் பெற்றவரும், அ.தி.மு.க. மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும் மாறாத விசுவாசம் கொண்டிருந்தவரும், ஆரம்பகால கழக உடன்பிறப்புமான நடிகர் போளூர் ஜெயகோவிந்தன் தலைமை கழக நட்சத்திரப் பேச்சாளராக, கழக கொள்கைகளையும், சாதனைகளையும் எதிர்க்கட்சியினரின் பொய் பிரசாரங்களையும் நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பட்டி தொட்டியெங்கும் எடுத்துரைத்தவர் ஆவார்.
தேர்தல் காலங்களில் இவருடைய பணிகள் பாராட்டுக்குரியவையாக அமைந்திருந்தன.
நடிகர் போளூர் ஜெயகோவிந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.