சூதாட்ட விளம்பரங்களில் நான் மட்டும்தான் நடிக்கிறேனா? தற்கொலைகளுக்கு காரணம் யார்? கொந்தளித்த நடிகர் சரத்குமார்
நான் மட்டுமே ஒன்லைன் சூதாட்டத்தில் நடிப்பதாக கூறப்படுவது தவறு என நடிகர் சரத்குமார் ஆவேசம்
கோலி, தோனி போன்றவர்களும் சூதாட்ட விளம்பரங்களில் நடிப்பதாக குற்றம்சாட்டும் சரத்குமார்
ஒன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரங்களில் பிரபலங்கள் நடிப்பதால் தான் பொதுமக்கள் அதனை விளையாடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகர் சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஒன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். சமீபத்தில் இளைஞர் ஒருவர் ஒன்லைன் ரம்மி விளையாட்டில் 15 லட்சம் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் தமிழகத்தில் ஒன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் உட்பட பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட், திரைப் பிரபலங்கள் பலரும் ஒன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருவது கண்டனங்களை பெற்றுள்ளது.
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரும் ஒன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், வேறு காரணத்தால் தற்கொலை செய்துகொண்டால் கூட ஒன்லைன் ரம்மியால் தான் அவர்கள் அந்த முடிவை எடுத்தார்கள் என தவறாக தகவல் பரப்பப்படுவதாக கூறினார்.
மேலும் பேசிய சரத்குமார், 'ஒன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டியது அரசு தான். அரசு தடை செய்தால் ஏன் விளம்பரங்களில் நடிக்க வேண்டி வருகிறது. சூதாட்ட விளம்பரங்களில் நான் மட்டுமே நடிப்பதாக கூறப்படுகிறது. வேறு யாரும் நடிப்பதில்லையா? Dream11 உள்ளிட்ட விளம்பரங்களில் கோலி, தோனி போன்றவர்களும் நடிக்கிறார்கள்.
குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என விளம்பரம் செய்யப்படுகிறது. யாரும் குடிக்காமல் இருக்கிறார்களா? நான் கூட யாரையும் குடிக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறேன். ஆனால் யாரும் கேட்கவில்லை. ஒன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தால் மட்டும் மற்றவர்கள் கேட்பதாக கூறுவது எப்படி சரியாகும்? உலகத்தில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது.
நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை விட்டு விட வேண்டும். அவ்வாறு செய்ய கட்டுப்பாடு இருந்தால் அவர்களாகவே நிறுவனங்களை மூடி விட்டு சென்று விடுவார்கள்' என தெரிவித்துள்ளார்.