போதை பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் வழங்கியது ஏன்? நீதிமன்றம் விளக்கம்
பிரபல திரைப்பட நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யாகான் போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கியது குறித்து நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 2-ஆம் திகதி மும்பை-கோவா சொகுசு கப்பலில், போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்சன்ட், மொடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட்டு, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன் பின், இது குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் படி, ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கும் கடந்த மாத இறுதியில் ஜாமீன் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யாகானுக்கு ஜாமீன் வழங்கியது குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், போதைப் பொருளை நேரடியாக கையாண்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தொழிலதிபர் அர்பாசுக்கும், ஆர்யன் கானுக்கும் இடையே வாட்ஸ்அப் உரையாடல்களில் சந்தேகத்திற்கு இடமான தகவல் இல்லை.
ஒரே கப்பலில் பயணம் செய்தார்கள் என்ற காரணத்திற்கான மட்டும் ஆர்யன் கானை போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்புப் படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது.