நடிகரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் அதிரடி கைது!
புதுச்சேரியில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட கனல் கண்ணன்
பெரியார் சிலை குறித்து அவரின் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் பொலிசார் நடவடிக்கை
நடிகரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கனல் கண்ணன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மேடையில் பேசுகையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினசரி லடசக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் (பெரியார்) சிலை உள்ளது. இந்த சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அப்போது தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறியிருந்தார்.
கனல் கண்ணனின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கனல் கண்ணனை கைது செய்ய கோரி, சென்னை மாநகராக காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவரின் முன் ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கனல் கண்ணன் எந்த நேரத்திலும் கைதாகலாம் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் பாண்டிச்சேரியில், மத்திய குற்றப்பிரிவு பொலிசாரால் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.