அரசியலை உன்னிப்பாக கவனிக்கிறேன் - நடிகர் சூர்யா
actor surya says closely monitoring politics: அரசியலுக்கு வரப்போவதில்லை, ஆனால் அரசியலை உன்னிப்பாக கவனிக்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர்களின் அரசியல் திட்டம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், கட்சி தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலே ஆட்சியை கைப்பற்றிய நிலையில், நடிகர்கள் பலருக்கும் அரசியல் ஆசை வந்துள்ளது.

நடிகர் தனுஷும், விஜய் பாணியில் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றி கட்சி தொடங்க உள்ளதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ராகவா லாரன்ஸும் அரசியலுக்கு வரலாமா என ரசிகர்களிடம் கருத்து கேட்டார்.
அதேபோல், நடிகர் சூர்யாவும் கட்சி தொடங்குவார் என அவ்வப்போது கருத்துகள் வெளியாகி வந்தன.
சூர்யா விளக்கம்
இந்நிலையில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் சூர்யா பேட்டி ஒன்றில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதில் பேசிய அவர், "வழிதெரியாமல் கூட நான் நிச்சயமாக அரசியல் பக்கம் போய்விடமாட்டேன். அரசியலுக்கு போக மாட்டேன் என்பதால் அதனை வெறுப்பதாக அர்த்தம் இல்லை, மவுனமாக, அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

என் மனதிற்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும். எனக்கு சமூகத்தில் இருக்கும் இடத்தையும் அடையாளத்தையும் கொடுத்தவர்களுக்கு எதையெல்லாம் திருப்பிக் கொடுக்க முடியுமோ, அதையெல்லாம் திருப்பிக் கொடுக்க நினைக்கிறேன்.
இளைஞர்கள் அரசியலை முழுமையாகப் புரிந்துகொண்டு வர வேண்டும். அரசியல்வாதிகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஊழலை மூன்றாவது நபர் ஒழிக்க முடியாது. முழு அர்ப்பணிப்புடன் யார் வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபடலாம்" என தெரிவித்துள்ளார்.