தவெகவில் இணைந்த நடிகர் டி.எஸ்.ஆர் சீனிவாசன்
நடிகர் டி.எஸ்.ஆர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்துள்ளனர்.
தவெகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பாரிய வெற்றியை பெற்று, ஆட்சியமைத்துள்ள நிலையில் பல்வேறு கட்சியினை சேர்ந்தவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர் அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.

அதைத்தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை அதிமுகவை சேர்ந்த 4 முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், திமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.கருணாநிதி உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில் இந்த சனிக்கிழமையும், அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பனையூர் தலைமை அலுவலகத்தில் தவெகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.
பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.
காங்கிரஸ் சார்பில் தொடர்ச்சியாக 3 முறை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி, கடந்த 2024 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட இவர் 3வது இடத்திற்கு சென்றார். தற்போது, பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.
இதே போல், நடிகர் டி எஸ் ஆர் சீனிவாசனும் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.
BX1QB9
இவர், தீரன் அதிகாரம் ஒன்று, பிகில், சர்தார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அயலி என்ற இணைய தொடரில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், அதிமுக முன்னாள் எம்.பிக்கள் பாலகங்கா, வனரோஜா, இளவரசன், முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.ரவி, முருகேசன், நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |