லண்டனில் இருக்கும்போது அந்த குறுஞ்செய்தியால் ரோட்டிலேயே உட்கார்ந்துவிட்டேன்! அவர் துரோகம் செய்துவிட்டார்..வேதனை தெரிவித்த நடிகர் விஷால்
இயக்குநர் மிஷ்கின் துரோகம் செய்துவிட்டதாக நேர்காணல் ஒன்றில் நடிகர் விஷால்வேதனை தெரிவித்துள்ளார்.
விஷால் - மிஷ்கின் கூட்டணி
இயக்குநர் மிஷ்கின் - நடிகர் விஷால் கூட்டணியில் 2017ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதே கூட்டணி துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பக்கத்திலும் இணைந்தது. விஷாலின் தயாரிப்பில் இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. ஆனால், மிஷ்கின் படத்திலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர் அவர் மேடையில் விஷால் குறித்து தரக்குறைவாக பேசினார். எனினும் விஷால் என் தம்பி, மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது என சமீபத்திய நேர்காணலில் இயக்குநர் மிஷ்கின் கூறினார்.
இயக்குநரான விஷால்
இதற்கிடையில் துப்பறிவாளன் -2 படத்தை தானே இயக்குவதாக விஷால் அறிவித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் விஷால் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மிஷ்கின் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் செய்த துரோகம்
இந்த நிலையில், மிஷ்கின் குறித்த கேள்விக்கு அவர் கூறுகையில், 'துப்பறிவாளன்-2 படத்தின் மூலம் எனது இயக்குநராகும் 25 ஆண்டு கனவு நிறைவேறப் போகிறது. நான் மிஷ்கின் உடனான உறவு குறித்து பேச விரும்பவில்லை. ஒரு தயாரிப்பாளராக லண்டனில் படப்பிடிப்பு நடத்தியிருந்தால் விஷால் பிலிம் பேக்டரி கடனில் மூழ்கியிருக்கும். அதனால் விழிப்புணர்வுடன் ஒரு முடிவு எடுத்தேன்.
ஒரு நடிகராக மட்டும் இருந்திருந்தால் அந்த படத்தில் நடித்திருப்பேன். ஆனால் ஒரு தயாரிப்பாளராக என்னால் அந்த வேதனையை தாங்க முடியவில்லை. எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது.
ஒரு மெசேஜ் வந்தது. அதைப் பார்த்ததும் நானும், பிரசன்னாவும் நடுரோட்டிலேயே உட்கார்ந்து விட்டோம். அதன் பின்னர் இது வேலைக்கு ஆகாது என முடிவு செய்து நிறுத்தி விட்டோம்.
மிஷ்கின் ஒரு நல்ல இயக்குநர் தான். ஆனால் துப்பறிவாளன் 2-வை பொறுத்தவரை அவர் செய்தது துரோகம். அதனை வாழ்நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன்.
அவரிடம் படம் குறித்த திட்டம் இல்லை. அவரை லண்டன் அழைத்துச் சென்றது என்னுடைய தப்பு தான். எப்போதும் அந்த துரோகத்தை நான் மறக்கவே மாட்டேன்' என தெரிவித்துள்ளார்.