விவேக்கின் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? முற்றுப்புள்ளி வைத்த சுகாதார செயலாளர்
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும், அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த ஒரு காரணமும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
பிரபல திரைப்பட நடிகரான விவேக், நேற்று கொரோனா தடுப்பூசிக் போட்டுக் கொண்ட நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த குறித்த மருத்துவமனையின் மருத்துவர் ராஜு கூறுகையில், இன்று காலை 11 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக நடிகர் விவேக்கை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அவருக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது இதயத்துடிப்பு குறைவாக இருந்தது. உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதயத்திற்குச் செல்லும் இடதுபுற ரத்தக்குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்தது.
ஆஞ்சியோ சிகிச்சை மூலமாக அது சரிசெய்யப்பட்டது. அதன் பின், எக்மோ கருவி உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரம் கண்காணித்த பிறகுதான் அவரது உடல்நிலை குறித்து கூற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடிகர் விவேக்கின் மாரடைப்பிற்கு, அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது தான் காரணம் என்று ஒரு புறம் வதந்திகள் கிளம்பியது.
இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அவர் உடல்நிலை முன்னேற வேண்டும் என்று தான் அனைவரும் செயல்பட்டு வருகிறோம். தற்போது அவரது உடல்நிலை மோசமாகத் தான் உள்ளது.
மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர் தடுப்பூசி போட்டதற்கும் மாரடைப்பு ஏற்பட்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவரது உடல்நிலை குறித்து நானே மன வருத்தத்தில் இருக்கிறேன்.
அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை. மாரடைப்பு தவிர அவருக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இது ஒரு எதிர்பாராத நிகழ்வு என்று விளக்கமளித்துள்ளார்.