என்னத்த கொண்டு வந்தோம், என்ன கொண்டு போறோம்'னு கேப்பாரு! மயில்சாமி குறித்து பிரபல நடிகர்கள் கண்ணீர்
நடிகர் மயில்சாமியின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாரடைப்பால் மரணம்
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பால் மரணடமடைந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மயில்சாமி குறித்து நடிகரும், இயக்குனருமான மனோபாலா கூறுகையில், 'அவ்வளவு பேருக்கு நல்லது செஞ்சவன். அவனை மாதிரி கொடை வள்ளல் யாரும் இல்லை. எல்லாருக்கும் சாப்பாடு போடுற குணம் படைத்தவன். மழை, புயல் வந்தபோதெல்லாம் படகு எடுத்துட்டு உதவி பண்ண கிளம்பிடுவாரு. பணம் செலவாகுதுனு சொன்ன, என்னத்த கொண்டு வந்தோம், என்ன கொண்டு போக போறோம்'னு கேப்பாரு. திரைத்துறையில் நடிகர்கள் தொடர்ந்து இறந்துட்டே இருக்காங்க. வேதனையா இருக்கு' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறும்போது, 'என்ன சொல்வதென்று தெரியவில்லை. மிகப்பெரிய இழப்பு, திரைத்துறைக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான். ஒரு வாரத்திற்கு முன்பு தான் நேரில் பார்த்து பேசிவிட்டு வந்தேன். அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தியானு கேட்டேன், ஆமா என்று கூறினார். அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு வந்தேன். அற்புதமான திறமை கொண்டவர். சிறந்த கலைஞன், சிறந்த குணச்சித்திர நடிகர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்' என தெரிவித்துள்ளார்.