இளம் வயதில் மரணமடைந்த நடிகை: பிரித்தானிய மருத்துவக் கூட்டமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
மருத்துவர்களுக்கு பதிலாக மருத்துவரின் உதவியாளர்களால் பரிசோதிக்கப்பட்டு, சரியான நோய் கண்டறியப்படாமல் தவறாக மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு இளம் நடிகை ஒருவர் உயிரிழந்த விடயம் நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது.
கால் வலி என மருத்துவமனைக்குச் சென்ற இளம்பெண்
பாடகியும் நடிகையுமான எமிலி (Emily Chesterton, 30) என்னும் இளம்பெண், தனது காலிலுள்ள ஆடுசதையில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அவரது பிரச்சினை என்ன என்பது, சரியாக, சரியான நேரத்தில், கண்டுபிடிக்கப்படாததால், மூன்றே வாரங்களில் உயிரிழந்துவிட்டார்.
Credit: Emily Chesterton
விடயம் என்னவென்றால், எமிலி இரண்டு முறை மருத்துவமனைக்குச் சென்றும், அவருக்கு மருந்துகள் பரிந்துரைத்தது, மருத்துவர்கள் அல்ல, physician associate (PA) என்னும் ஒரு உப மருத்துவப் படிப்பு முடித்த மருத்துவரின் உதவியாளர்கள்.
மருத்துவர்கள் ஆறு ஆண்டுகள் மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்து, அதற்குப்பின் இரண்டு ஆண்டுகள் foundation training programme என்னும் படிப்பை முடிக்கவேண்டும். ஆனால், இந்த PA என்னும் மருத்துவரின் உதவியாளர்கள், ஏதாவது ஒரு அறிவியல் பட்டப்படிப்புக்குப் பின், இந்த physician associate என்னும் பாடப்பிரிவை இரண்டாண்டுகள் படிக்கிறார்கள். ஆகவே, அவர்கள் மருத்துவர்கள் ஆகிவிடமுடியாது. அவர்கள் மருத்துவரின் கண்காணிப்பின் கீழ், மருத்துவருக்கு உதவும் பணிகளில் ஈடுபடலாம், அவ்வளவுதான்.
பரிதாபமாக பலியான 30 வயது நடிகை
ஆனால், எமிலியை பரிசோதித்தது மருத்துவர்களே அல்ல. இந்த PA என்னும் மருத்துவரின் உதவியாளர்கள்தான் இரண்டு முறையும் அவரை பரிசோதித்து, ஒரு முறை அவருக்கு வலிக்கான பாராசிட்டமால் மாத்திரையும், அடுத்த முறை இதயத்துடிப்பை குறைப்பது போன்ற விடயங்களுக்காக கொடுக்கப்படும் propranolol என்னும் மருந்தையும் கொடுத்துள்ளார்கள்.
Credit: Lily Barnes
இரண்டாவது முறை மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய எமிலி, அன்று மாலையே நிலைகுலைந்து சரிய, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சில மணி நேரத்துக்குப் பின் உயிரிழந்துவிட்டார்.
பிரச்சினை என்னவென்றால், எமிலியின் காலிலுள்ள இரத்தக்குழாய் ஒன்றில் ஒரு இரத்தக்கட்டி உருவாகியுள்ளது. அது, நுரையீரலுக்குச் செல்லும் இரத்தக்குழாய் ஒன்றில் சென்று சிக்கியுள்ளது. அதனால் pulmonary embolism என்னும் பிரச்சினை ஏற்பட, எமிலி உயிரிழந்துள்ளார்.
தன் மகளை ஒரு மருத்துவர் பார்த்திருந்தால் அவள் உயிரிழந்திருக்க மாட்டாள் என கண்ணீர் விட்ட எமிலியின் தாய், எமிலியை பரிசோதித்தவர்கள் மருத்துவர்கள் அல்ல, அவர்கள் PA என்னும் மருத்துவரின் உதவியாளர்கள்தான் என்பது எமிலிக்குத் தெரியாது, தாங்கள் மருத்துவர்கள் அல்ல என்பதை அவர்களும் கூறவில்லை என்று கூறியிருந்தார்.
Credit: Emily Chesterton
மருத்துவக் கூட்டமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
எமிலியின் மரணத்தைத் தொடர்ந்து, நோயாளிகள், முறையான தகுதி பெறாத மருத்துவ உதவியாளர்களால் ஏமாற்றப்படுவது நிறுத்தப்படவேண்டுமென எச்சரித்துள்ள பிரித்தானிய மருத்துவக் கூட்டமைப்பு, அவர்கள் சரியான மருத்துவர்களால் பரிசோதிக்கப்படவேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது.
பிரித்தானிய மருத்துவக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள், மருத்துவர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் இருந்தாலன்றி, physician associate (PA) என்னும் மருத்துவரின் உதவியாளர்கள் நோயாளிகளை பரிசோதிக்கக்கூடாது என கூறுகின்றன.
அத்துடன், PA என்னும் மருத்துவரின் உதவியாளர்கள், தங்கள் யார் என்பதை சரியாக தெரிவிக்காமல், தங்களை மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என நோயாளிகளிடம் அறிமுகம் செய்துகொள்ளக்கூடாது என்றும் புதிய விதிகள் கூறுகின்றன.
நோயாளியை மருத்துவர் பரிசோதித்த பிறகே அவர்கள் பரிசோதிக்கலாம் என்றும், அதுவும், ஒரு மருத்துவர் தங்களை கவனித்துக்கொண்டிருக்கும்போது, அவரது கண்காணிப்பின் கீழ்தான் நோயாளியை பரிசோதிக்கலாம் என்றும் விதிகள் கூறுகின்றன.
நாடாளுமன்றம் வரை சென்ற எமிலியின் மரணச் செய்தி
இந்நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய எமிலியின் பெற்றோர், மருத்துவரின் உதவியாளர்களுக்கான இந்த வழிகாட்டு நெறிமுறைகள் முன்பே அறிமுகம் செய்யப்பட்டிருந்தால் தங்கள் மகள் இப்போது உயிருடன் இருந்திருப்பார் என்று கூறியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |