என்னோட புகைப்படங்களை மார்பிங் செய்து.. கண்ணீர்விட்டு கதறும் தமிழ் நடிகை.. குறுந்தகவலால் வந்த வினை
மார்பிங் செய்து தனது புகைப்படங்களை வெளியிடுகிறார்கள் என கதறும் நடிகை லக்ஷ்மி வாசுதேவன்
லக்ஷ்மி வாசுதேவன், யாரும் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்
நடிகை லக்ஷ்மி வாசுதேவன் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து பெற்றோர், நண்பர்களுக்கு அனுப்புகிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.
திரைப்பட நடிகை லக்ஷ்மி வாசுதேவன் சமூக வலைதளத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 11ஆம் திகதி 5 லட்சம் பரிசு விழுந்ததாக குறுஞ்செய்தி வந்ததாக தெரிவித்த அவர், அதனுடன் வந்த ஒரு லிங்கை தொட்டவுடன் செயலி ஒன்று பதிவிறக்கம் ஆனதாக கூறியுள்ளார்.
அந்த செயலி பதிவிறக்கமான 3 நாட்கள் கழித்து மர்மநபர்கள் அவருக்கு போன் செய்து, நீங்கள் 5 ஆயிரம் கடன் பெற்றுள்ளீர்கள் அதனை திரும்ப செலுத்துங்கள் என்று கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்த மர்ம நபர்கள், மோசமாக அவரிடம் பேசி புகைப்படங்களை மார்பிங் செய்து வைரலாகி விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் லக்ஷ்மி வாசுதேவனின் புகைப்படங்களை மார்பிங் செய்து அவரது நண்பர்கள், பெற்றோருக்கு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக சைபர் பிரிவில் நடிகை லக்ஷ்மி வாசுதேவன் புகார் அளித்துள்ளார்.
மேலும் அவர் இந்த சம்பவம் குறித்து விரிவாக கண்ணீருடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் யாரும் இதுபோன்ற தேவையில்லாத செயலிகளை தரவிறக்கம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.