42 வயதில் மர்ம மரணம்! நடிகை வழக்கில் அடுத்தடுத்து கைதான 4 பேர்..பரபரப்பாகும் வழக்கு
ஹரியானா மாநில பாஜக கட்சியின் மூத்த தலைவரும், நடிகையுமான சோனாலி போகட் (42) மாரடைப்பால் உயிரிழந்ததாக செய்தி வெளியானது
சோனாலி போகட் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
நடிகை சோனாலி போகட் உயிரிழந்த வழக்கில் கோவா விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22ஆம் திகதி கோவாவுக்கு சுற்றுலா சென்ற அவர் இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டதை அவரது குடும்பத்தினர் நம்பவில்லை.
சோனாலியின் சாவில் மர்மம் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் பொலிசார் விசாரணையை தொடங்கினர். கோவாவில் உள்ள விடுதி ஒன்றில் சோனாலி தனது உதவியாளர்களான சுதிர் சங்வான், சுக்விந்தர் சிங் ஆகியோருடன் ஒன்றை சாப்பிட்டுள்ளார்.
அப்போது அவர்கள் இருவரும் சோனாலியை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய பொலிசார், சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, குளிர்பானத்தில் போதைப் பொருளை கலந்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டனர். மேலும் கிளப்பின் கழிவறையில் இருந்து போதைப்பொருட்களை பொலிசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில், விடுதியின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை சோனாலியின் மரண வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சோனாலி போகட்டின் பிரேத பரிசோதனை முடிவில், அவரது உடலின் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது.
இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அத்துடன் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.