$2.2 பில்லியன் லஞ்ச ஊழல் வழக்கு: டிரம்ப் அரசிடம் உதவி கோரும் அதானி!
$2.2 பில்லியன் லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை ட்ரம்ப் நிர்வாகத்திடம் ரத்து செய்ய கோரி அதானி குழுமம் கோரிக்கை வைத்துள்ளது.
டிரம்பை நாடிய அதானி குழுமம்
அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ரூ.2,200 கோடி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை நிறுத்துமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தை அதானி குழுமம் அணுகியுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை முன்னணி செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வினீத் ஜெயின் உள்ளிட்ட ஏழு பேர் மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி ஆகிய தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள்
2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாடு, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா போன்ற முக்கிய மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை அதிக விலைக்குப் பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் சுமார் ரூ.2,100 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு திரட்டியதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கின் புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதானி குழுமத்துக்கு நீதிமன்றம் முறையாக சம்மன் அனுப்பியுள்ளது
ரகசிய சந்திப்பு
தற்போது, அதானி குழுமத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளை ரகசியமாக சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம், தங்களுக்கு எதிரான இந்த தீவிரமான ஊழல் வழக்கு விசாரணையை ரத்து செய்ய கோருவதாகும். இந்த முக்கியமான பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதில் ஒரு தெளிவான முடிவு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த லஞ்ச வழக்கு ட்ரம்ப் அரசாங்கத்தின் முக்கிய கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும், எனவே இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதானி குழுமம் சார்பில் வலியுறுத்தப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |