நியூசிலாந்து டி20யில் மிரட்டிய 22 வயது தமிழக வீரர்! ஒடாகோ அணியை வீழ்த்தி ஆட்டநாயகன்
சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டியில் ஆக்லாந்து அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒடாகோ அணியை வீழ்த்தியது.
மார்க் சாப்மேன் அதிரடி
ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டியில், ஆக்லாந்து மற்றும் ஒடாகோ அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ஆக்லாந்து (Auckland) அணியில் மார்க் சாப்மேன் (Mark Chapman) அதிரடியாக 40 பந்துகளில் 68 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
பெவோன் ஜேக்கப்ஸ் 30 பந்துகளில் 37 ஓட்டங்களும், அணித்தலைவர் சியான் சோலியா 10 பந்துகளில் 24 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் ஆக்லாந்து அணி 6 விக்கெட்டுக்கு 197 ஓட்டங்கள் குவித்தது. ஆண்ட்ரு ஹேசல்டினே 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஆதித்யா அசோக் மிரட்டல்
அதன் பின்னர் ஆடிய ஒடாகோ அணியில் ஜமால் டாட் 16 (10) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜான்சன், டேல் பிலிப்ஸ் உடன் கைகோர்த்து அதிரடி காட்டினார்.
இந்தக் கூட்டணி 30 பந்துகளில் 52 ஓட்டங்கள் குவித்தது. 25 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் எடுத்திருந்த டேல் பிலிப்ஸ், தமிழக வீரர் ஆதித்யா அசோக் ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து கிளென் பிலிப்ஸ் 21 ஓட்டங்களில் வெளியேற ஒடாகோ அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.
டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் (0), ஆண்ட்ரு ஹேசல்டினே (0) ஆகிய இருவரையும் ஆதித்யா அசோக் டக்அவுட்டாக்கி வெளியேற்ற, ஒடாகோ 128 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஆக்லாந்து அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3வது வெற்றியை பதிவு செய்தது. 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆதித்யா அசோக் (Adithya Ashok) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |