2வது சுற்றுவட்டப் பாதைக்கு ஆதித்யா எல்-1 முன்னேறியது!
ஆதித்யா எல்-1 தனது சுற்றுவட்ட பாதையை அதிகரித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆதித்யா எல்1
ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 11.50 மணி அளவில் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த திட்டத்தின் இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி பொறுப்பெடுத்துள்ளார். இந்தியா சார்பில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான் என்ற பெருமையை ஆதித்யா எல் 1 பெறும்.
இந்நிலையில் தனது பயணத்தை வெற்றிகரமாக செய்துக்கொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 தனது சுற்றுவட்ட பாதையை அதிகரித்துள்ளது.
சுற்றுவட்ட பாதை அதிகரிப்பு
விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப் பாதையானது ஞாயிற்றுக்கிழமை 11.40 மணியளவில் மாற்றப்பட்டது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 245 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 22,459 கி.மீ தொலைவிலும் இருக்கும்படி அதிகரித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதன் இரண்டாவது சுற்றுவட்ட பாதைக்கு முன்னேறியுள்ளது. அதன்படி பூமியில் இருந்து குறைந்தபட்சம் 282 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 40,225 கி.மீ தொலைவிலும் இருக்கும்படி அதிகரித்துள்ளது.
மேலும் இந்த விண்கலம் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் 2வது சுற்றுப்பாதை வருகின்ற 10 ஆம் திகதியன்று 2.30 மணியளவில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |