'ஆதித்யா எல்-1’ விண்கல திட்ட இயக்குநராக தமிழக பெண் விஞ்ஞானி! யார் இவர்?
'ஆதித்யா எல்-1’ விண்கல திட்ட இயக்குநராக இடம் பெற்ற தமிழக பெண் விஞ்ஞானி நிகார் சுல்தானாவை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
தமிழக பெண் விஞ்ஞானி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்வெளித்துறையில் மற்றொரு சாதனை புரிவதற்கு தயாராகி வருகிறது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் உள்நாட்டு விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டு நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் இயக்குனராக தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகார் சுல்தானா உள்ளார் .
செங்கோட்டை கீழ பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தம்பதிகள் சேக் மீரான் மற்றும் சைதுன் பீவீ. இவர்களது மூன்றாவது மகள் நிகார் சுல்தானா. இவரது கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராகவும், மகன் முகமது தாரிக் நெதர்லாந்தில் விஞ்ஞானியாகவும் உள்ளனர். மேலும், இவரது மகள் தஸ்நீம் எம்.எஸ் படித்து வருகிறார்.
இவர், தனது 1 முதல் 5 ஆம் வகுப்பு பள்ளி படிப்பை செங்கோட்டை அரசு பள்ளியிலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை எஸ்.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
இதன் பின், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்து, பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்றார். இதனைத்தொடர்ந்து, இஸ்ரோவில் சேர்ந்து தனது பணியை தொடங்கினார்.
ஆதித்யாவில் தமிழக விஞ்ஞானி
இஸ்ரோவின், 'ஆதித்யா எல்-1’ விண்கல திட்டத்தின் இயக்குநராக விஞ்ஞானி நிகார் சுல்தானா இணைந்தார். பின்னர் இவர், நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையங்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
இவரது தலைமையில் விஞ்ஞானிகள் இணைந்து ஆதித்யா எல்-1’ விண்கலத்தை உருவாக்கினர். இந்த திட்டத்தின் முழு பணிகளும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா செயற்கைக்கோளின் கவுண்டவுன் தொடங்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |