தவெகவில் இணைந்த 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் - யார் யாரெல்லாம்?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்துள்ளனர்.
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி ஏற்பட்டு, சி.வி.சண்முகம் தலைமையில் சில எம்எல்ஏக்கள் ஒரு அணியாக செயல்பட்டு வந்தனர்.
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெகவிற்கு ஆதரவாக இந்த 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
அதைத்தொடர்ந்து, 4 அதிமுக எம்.எல்.ஏ. க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.
இதன் பின்னர் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்ட நிலையில், ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
இதனையடுத்து, எஸ்.பி.வேலுமணி தலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒன்றிணைந்தனர்.

இருப்பினும் இன்னும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காத சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெகவில் இணைவது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

அதிமுகவை குதிரை பேரம் உடைக்க விஜய் முயற்சித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், இன்று 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி சம்பத், என்.ஆர்.சிவபதி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.கள் கோவிந்தசாமி (பாப்பிரெட்டிபட்டி), சுந்தரராஜ் (சங்ககிரி), ராஜமுத்து (வீரபாண்டி), மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), பன்னீர் செல்வம் (கலசப்பாக்கம்), ராஜவர்மன் (சிவகாசி) ஆகியோர் இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இணைந்துள்ளனர்.
மேலும், அவர்களின் ஆதரவாளர்கள் சுமார் 500 பேர் தவெகவில் இணைந்துள்ளனர்.
மேலும், திமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.கருணாநிதியும் தவெகவில் இணைந்துள்ளார்

இவர்களை வரவேற்று பேசிய அமைச்சர் அஆதவ் அர்ஜுனா, "அதிமுகவும் தவெகவும் ஒன்று தான். த.வெ.க மாற்று கட்சி அல்ல தாய் கட்சி. செங்கோட்டையனை எங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்ப்பது போல் உங்களையும் பார்ப்போம்.
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான். முதல்வர் ஆவதற்காக எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் தான் அதிமுக தற்போது இப்படி உள்ளது.
கலைஞரின் அனைத்து உண்மையான விசுவாசிகளையும் தவெகவிற்கு வரவேற்கிறோம். வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தவெகவே வெற்றி பெறும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |