எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ஜேர்மனியின் AfD: வெளிப்படையாக எச்சரித்த பிரான்ஸ்
Germany’s far-right AfD thanks Elon Musk: ஜேர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான AfD, எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தது.
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றியை அடுத்து, தீவிர வலதுசாரி கட்சியான AfD-ன் முதன்மை வேட்பாளர், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நன்றி
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் தங்கள் ஆதரவை இருமடங்கிற்கும் மேல் உயர்த்தியுள்ள AfD, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜேர்மனியில் மாகாண அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் முதல் தீவிர வலதுசாரி கட்சியாக உருவெடுக்கும் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு, AfD கட்சியின் முதன்மை வேட்பாளரான உல்ரிச் சீக்மண்ட் (Ulrich Siegmund), உங்கள் ஆதரவிற்கும், தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தெளிவான மற்றும் மிக முக்கியமான கண்ணோட்டத்திற்கும் நன்றி தெரிவித்து சமூக ஊடகப் பக்கத்தில் மஸ்க்கிற்கு நன்றி கூறியுள்ளார்.
அத்துடன், வலுவான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புக்கான வாய்ப்பை மிகவும் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் Saxony-Anhalt மாகாணத் தேர்தல் கணிப்பின் ஸ்கிரீன்ஷாட்டை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் பதிவிட்டிருந்தார்.
மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதியின் தூதர் கிரில் டிமிட்ரியேவ், ட்ரம்ப்பின் பதிவினை மீள் பதிவிட்டு, யதார்த்தவாதப் போக்குடைய AfD கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று அதைப் பாராட்டினார்.
ரஷ்ய ஆதரவு AfD உக்ரைனுக்கான ஆதரவை நிறுத்துமாறும், உக்ரைனியர்களுக்கு இனி அகதி அந்தஸ்து வழங்கப்படக்கூடாது என்றும் ஜேர்மன் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்துள்ளது.
இதனிடையே, அமோக வெற்றி பெற்ற போதிலும், AfD பெரும்பான்மையைப் பெறுவதில் சற்று பின்தங்கியுள்ளது. இறுதி முடிவுகளின்படி, 83 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 39 ஆசனங்களைப் பெற்ற AfD கட்சி, பெரும்பான்மைக்குத் தேவையான ஆசனங்களை விட மூன்று ஆசனங்கள் குறைவாகவே பெற்றுள்ளது.
பெர்லினுக்கு மேற்கே சுமார் 21 லட்சம் மக்கள் வசிக்கும் Saxony-Anhalt மாகாணத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற வாக்குகளை விட இருமடங்கிற்கும் அதிகமாக, அதாவது 43.8 சதவீத வாக்குகளை AfD கட்சி பெற்றுள்ளது.
அந்நிய வெறுப்பு
இந்த நிலையில், பிரான்ஸின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் பெஞ்சமின் ஹடாட், இந்த வெற்றியை ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான தருணம் என்று குறிப்பிட்டதுடன், தேசியவாதமும் அந்நிய வெறுப்பும் ஒருபோதும் தீர்வாக அமையாது என்றும் எச்சரித்துள்ளார்.

அத்துடன், கோபம், கவலைகள், அச்சங்கள் ஆகியவற்றை நாம் பணிவுடன் செவிமடுத்து, அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றார். நமது வரலாற்றை நம்மால் மறக்க முடியாது. பிரான்சும் ஜேர்மனியும் எடுத்த முடிவுகளுக்குப் பின்னால் உள்ள அர்த்தம் இதுதான் என்றார்.
போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவிக்கையில், போலந்தில், முட்டாள்கள் அல்லது துரோகிகள் மட்டுமே ஜேர்மனியில் AfD-யின் வெற்றியைக் கண்டு மகிழ முடியும் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |