டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் விளையாடும்! இலங்கையிலும் ஆடுவோம்... பரபரப்பான சூழலில் வெளியான அறிவிப்பு
உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ஆப்கன் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா். இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தாலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இந்தச் சூழலில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்து கேள்வி எழுந்தது. உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ள குரூப் 2 பிரிவில் ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளது.
எனினும் நாட்டில் அசாதாரண சூழல் நிலவினாலும் டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் ஊடக மேலாளர் ஹிக்மத் ஹாசன், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நாங்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவோம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சிலநாள்களில் எங்கள் வீரர்கள் காபூலில் பயிற்சியை மீண்டும் தொடங்குவார்கள். அவுஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுடன் இணைந்து நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டிக்கான இடத்தைப் பார்த்து வருகிறோம்.
இலங்கை, மலேசியா நாடுகளிடம் பேசிவருகிறோம். இலங்கையில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்போம் என கூறியுள்ளார்.