நான் இறந்தால் பிரித்தானியா தான் பொறுப்பு! லண்டனில் படித்த ஆப்கான் இளைஞர் கண்ணீர்
லண்டனில் படித்து ஆப்கானுக்கு திரும்பிய இளைஞன், தான் இறந்தால் அதற்கு பிரித்தானியா அரசாங்கம் தான் பொறுப்பு என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் வந்துவிட்டதால், இப்போது அங்கிருக்கும் மக்கள் நாட்டை விட்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று தவித்து வருகின்றனர்.
ஏனெனில் அவர்களின் சட்டம், கொடுக்கப்படும் தண்டனை போன்றவை மிகவும் கொடூரமாக இருக்கும் என்பதால், உயிர் பயத்தில் எப்படியாவது இங்கிருந்து சென்றால் போதும் என மனநிலையில் உள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மிக முக்கிய நகரமான காபூலில் இருக்கும் அலி(பெயர் பாதுகாப்பு காரணமாக மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞன் பிரபல ஆங்கில ஊடகமான Metro.co.uk-விற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் தான் மரண பயத்தில் இருப்பதாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது கடும் பீதியில் இருக்கிறேன்.
நடுக்கத்தில் இருக்கிறேன். நான்கு நாட்களாக நான் தூங்கவில்லை, சாப்பிடவில்லை. என் குடும்பம் தலைமறைவாக உள்ளது. எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
நாங்கள் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர், தாலிபான்களின் முகவர், அவர் என்னிடம் நீ எட்டு ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்துள்ளாய். இப்போது இங்கு நீ வந்திருக்கிறாய். நீங்கள் ஒரு உளவாளி, தாலிபான்கள் வரும் போது, நீங்கள் அவர்களின் முதல் இலக்காக இருப்பீர்கள் என்று கூறினார்.
இதனால் நாங்கள் உடனடியாக அந்த வீட்டை விட்டு இரவோடு இரவாக வெளியேறிவிட்டோம். எங்கள் உடைகள் அனைத்தும் அங்கே உள்ளன. நாங்கள் எத்தனை காலம் மறைந்திருக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியாது.
ஆனால் நாங்கள் செல்ல எங்கும் இடமில்லை. மிகவும் பயத்தில் இருக்கிறோம். விமானநிலையம் வழியாக தப்பிக்க முயன்ற போது, விசா இல்லாத காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளேன்.
அலி, கடந்த 2011-ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்று சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பிறகு 2015-ஆம் ஆண்டு தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளார். இதற்கிடையில் இவர் காபூலுக்கு சென்று திரும்பியுள்ளார்.
அப்போது பிரித்தானியா உள்துறை அதிகாரிகள் இவர் சட்டவிரோதமாக தங்கியுள்ளார் என்று கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்து, நாடு கடத்தியுள்ளனர்.
ஆனால், இவர் அப்போது, என் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை, நான் வேலை செய்யும் மற்றும் வரி செலுத்தும் ஒரு நாகரிக நபராக இருக்க முடியும். நான் படித்தவன், எனக்கு ஐரோப்பிய மனநிலை உள்ளது. நான் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதற்கு முன்பு பகுதிநேர வேலை செய்தேன் என்று கூறியுள்ளார்.
ஆனால், அவர்கள் இவர் பேச்சைக் கேட்கவில்லை என்று கூறுவதுடன், நான் பிரித்தானியா அரசின் மீது கோபமாக இருக்கிறேன். ஒரு போர் நடப்பதாகவும், தாலிபான்கள் இன்றோ அல்லது நாளையோ வரப்போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இருப்பினும், அவர்கள் என்னை பலவந்தமாக திருப்பி அனுப்பினர், அவர்கள் என்னை நாடு கடத்தினர். நான் இறந்தால், பிரித்தானியா அரசாங்கம் தான் பொறுப்பு என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
கடந்த 2001-ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின் படி, பிரித்தானியாவில் 32,000-க்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களை உள்துறை அலுவலகம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.