விமான சக்கரத்தில் பயணித்து இந்தியா வந்த சிறுவன் - உயிர் பிழைத்தது எப்படி சாத்தியம்?
விமான சக்கரத்தில் பயணித்தபடி சிறுவன் இந்தியாவிற்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக விமான பயணம் என்பது கடுமையான பாதுகாப்பு சோதனைகள் உடையதாகும். அதுவும் வெளிநாட்டு பயணம் செல்லும் போது விசா, பாஸ்போர்ட் ஆகியவை இருந்தால் தான், விமானத்திலே ஏற முடியும்.
விமான சக்கரத்தில் பயணித்து இந்தியா வந்த சிறுவன்
ஆனால், சிறுவன் ஒருவன் விமான சக்கரத்தில் தொங்கியபடி இந்தியாவிற்கு வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, KAM ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் RQ4401 விமானம், இந்தியா நேரப்படி காலை 8:46 மணிக்குப் புறப்பட்டு, காலை 10:20 மணிக்கு டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
விமான தரையிறங்கிய பின்னர், விமானத்தின் சக்கர பகுதியில் இருந்து பாதுகாப்பான உடல்நிலையுடன் இறங்கிய ஒரு சிறுவனன் தடை செய்யப்பட்ட விமான நிலையத்தின் பகுதிக்கு செல்வதை ஊழியர் கவனித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
அந்த 13 வயது சிறுவனிடம் விமான நிலைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஈரானுக்கு செல்ல திட்டமிட்டதாகவும், தவறுதலான விமானத்தில் ஏறி இந்தியாவிற்கு வந்ததும் தெரிய வந்துள்ளது.
சிறுவன் என்பதால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என கூறப்படுகிறது. அதேவேளையில், ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தின் பாதுகாப்பு குளறுபடி குறித்து இந்த சம்பவம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயிர் பிழைத்தது எப்படி?
10,000 அடிக்கு மேல் விமானம் பறக்கும் போது ஆக்ஸிஜன் இருக்காது, வெப்பநிலை -40°C முதல் -60°C என்ற அளவில் இருக்கும், மயக்கம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் உறைபனி இருக்கும்.
இந்த சூழலில் விமானம் பறக்கும் போது வெளியே ஒருவர் உயிர் வாழ்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் உயிர் பிழைத்ததற்கான சாத்தியக்கூறு குறித்து பேசிய விமான போக்குவரத்து நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன், "விமானம் பறக்க தொடங்கியதும், சக்கர அறைக்கான கதவுகள் திறக்கப்பட்டு, சக்கரங்கள் உள்ளிழுக்கப்பட்டு பின்னர் அறை மூடப்படும்.
சிறுவன் அந்த சக்கர அறைக்குள் நுழைந்திருக்கலாம். அங்கு கேபின் உள்ள இருக்கும் வெப்பநிலை இருந்திருக்கலாம். இல்லையெனில், 30,000 அடி உயரத்தில் அந்த வெப்பநிலையில் உயிர்வாழ்வது சாத்தியமற்றது" என தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக விமான சக்கரத்தின் மூலம் பயணிக்கும் 5 நபர்களில் ஒருவரே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது இந்தியாவில் 2வது சம்பவமாகும். முன்னதாக அக்டோபர் 14, 1996 அன்று, பிரதீப் சைனி (22) மற்றும் விஜய் சைனி (19) என்ற 2 சகோதரர்கள் டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸின் போயிங் 747 விமானத்தில் சக்கரம் மூலம் பயணித்தனர்.
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது, பிரதீப் சைனி மட்டும் உயிருடன் இருந்தார். விஜய் சைனி சடலமாக மீட்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |