ஓரே ஓவரில் 3 விக்கெட்! 5 டக் அவுட்: ஸ்காட்லாந்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ஆப்கானிஸ்தான்
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 190 ஓட்டங்கள் குவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 12-ன் இன்றைய ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கிடையேயான இந்த போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
அதன் படி டாஸ் வென்று முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க வீரர் மொகமது ஷாசாத் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ரஹ்மனுல்லா குர்பஸ் மற்றும் மற்றொரு துவக்க வீரர் ஹசரதுல்லா ஷாஷாய் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக ஹசரதுல்லா ஷாஷாய் ஸ்காட்லாந்து அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். 30 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்த அவர், மார்க் வாட் பந்து வீச்சில் கிளீல் போல்டாகி வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து ரஹ்மனுல்லா குர்பஸ் 46 பந்துல் ஜோஷ் டேவி பந்து வீச்சில் அவுட்டாக, நஜுபுலா ஜார்டன் ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டார். இவருக்கு இணையாக மொகமது நபி ஆட்டம் கொடுக்க, ஆப்கானிஸ்தான் அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் எகிறியது.
இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய நஜுபுலா ஜார்டன் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார். மொகமது நபி 4 பந்தில் 11 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக சாய்பான் சரீப் 4 ஓவர் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 33 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். 191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு, ஆப்கான் அணியின் சுழற்பந்து பந்து வீச்சாளர் முஜீப் அர் ரஹ்மான் பெரும் தொந்தரவு கொடுத்தார்.
இவர் வீசிய ஆட்டத்தின் 3-வது ஓவரில் ஸ்காட்லாந்து அணியின் கைல் கோட்ஸர்(10), கால் மெக்ஸ்லியோட் டக் அவுட், ரிச்சி பெர்ரிங்டன் டக் என அடுத்தடுத்து வெளியேறினர். அதன் பின் ஸ்காட்லாந்து அணியால் நிமிரவே முடியவில்லை.
இதனால் 10.2 ஓவரிலே வெறும் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஸ்காட்லாந்து அணி ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் அர் ரஹ்மான் 4 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளும், ரஷீத்கான் 2.2 ஓவரில் 9 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
ஸ்காட்லாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி 131 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளதால், இரண்டாவது குழுவில் உள்ள இந்த அணி புள்ளிப் பட்டியலில் +6.500 பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த படியாக நேற்று இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணி +0.973-வுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.