பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்
தாலிபான்களால் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் இனி பயங்கரவாதிகளுக்கான பாதுகாப்பான புகலிடமாக மாறிவிட அனுமத்திக்ககூடாது என பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
நகரப் பேருந்துகளில் ஏறுவதற்கு முண்டியடிப்பது போல், பலர் விமானத்தில் ஏற முயற்சித்து வரும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், தொடர்ந்து நிலைமை மோசமடைந்து வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், உறுதியளித்த ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஆப்கானிஸ்தான் இனி பயங்கரவாதிகளுக்கான பாதுகாப்பான சொர்க்கபூமியாக மாறிவிடகூடாது என தெரிவித்துள்ளார்.
இதற்காக ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து பிரான்ஸ் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் பங்கையும் செய்யும் என அவர் உறுதியளித்தார்.
மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இது குறித்து ஒரு பொதுவான மற்றும் ஒற்றுமையான முடிவைக் கொண்டு வர வேண்டும் என மக்ரோன் கேட்டுக்கொண்டார்.
ஐரோப்பாவை நோக்கி புலம்பெயர்ந்தவர்களின் அலை வீசும் அபாயம் இருப்பதாக மக்ரோன் கூறினார்.
அதேசமயம் பிரான்ஸ் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை தொடர்ந்து பாதுகாக்கும் என்றும் சுமையை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நியாயமான சர்வதேச முயற்சியில் தனது பங்கை வகிக்கும் என்றும் அவர் கூறினார்.