இந்தியாவில் வெள்ளைப் பூஞ்சை நோய் 4 பேருக்கு கண்டுபிடிப்பு! கருப்புப் பூஞ்சையை விட ஆபத்தானது என பகீர் தகவல்
இந்தியாவில் ஏற்கனவே கருப்பு பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ள நிலையில் பாட்னாவில் அதை விட ஆபத்தான வெள்ளைப் பூஞ்சை நோய் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது.
வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை தொற்று நோயாகவும் அறிவித்துள்ளன.
கருப்பு பூஞ்சை நோயை தமிழக அரசும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. இதேபோன்று ஒடிசா அரசு, கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக சேர்த்து உள்ளது.
இந்த நிலையில், பீகாரின் பாட்னா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட 4 பேருக்கு வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது அறியப்பட்டு உள்ளது.
இது கருப்பு பூஞ்சை நோயை விட கொடியது என கூறப்படுகிறது. நோய் பாதித்த 4 பேரில் ஒருவர் பாட்னா நகரில் பிரபல சிகிச்சை நிபுணர் ஆவார்.
இந்த வெள்ளை பூஞ்சை நோயானது நுரையீரல் தொற்று ஏற்பட காரணம் ஆகிறது. இது தவிர்த்து, தோல், நகங்கள், வாயின் உட்புற பகுதி, வயிறு, குடல், இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் மூளை உள்ளிட்ட உடல்பாகங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது.
இதுபற்றி மருத்துவர் எஸ்.என். சிங் கூறுகையில், இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கொரோனா வைரசின் அறிகுறிகள் காணப்படும்.
ஆனால், அவர்கள் வெள்ளை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். கொரோனா வைரசால் அல்ல. இதுவரை பாட்னா நகரில் 4 பேருக்கே இந்த வெள்ளை பூஞ்சை நோய் கண்டறியப்பட்டு உள்ளது.
அந்த 4 பேருக்கும் பூஞ்சை ஒழிப்பு மருந்து கொடுக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர் என்பது ஆறுதல் அளிக்கும் விடயம் என கூறியுள்ளார்.