ஜேர்மனியை அடுத்து எலோன் மஸ்க் மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பிரான்ஸ்
நடக்கவிருக்கும் ஜேர்மனியின் தேர்தல் உட்பட பல நாடுகளின் அரசியலில் பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தேவையின்றி தலையிடுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேரடியாக தலையிடுவார்
பிரான்ஸ் நாட்டின் தூதர்களிடையே உரையாற்றியுள்ள ஜனாதிபதி மேக்ரான், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒரு புதிய சர்வதேச பிற்போக்கு இயக்கத்தை ஆதரிப்பார் என்று சொல்லப்பட்டிருந்தால் அதை யார் கற்பனை செய்திருக்க முடியும்?
மட்டுமின்றி ஜேர்மனி உட்பட தேர்தல்களில் நேரடியாக தலையிடுவார் என்றால் நம்ப முடியுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். சமீபத்தில் ஜேர்மன் தேர்தல் தொடர்பிலும், பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸாட்ர்மர் தொடர்பிலும் எலோன் மஸ்க் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகயிலேயே ஜனாதிபதி மேக்ரான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்லா உரிமையாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவது இது முதல்முறை அல்ல. ஐரோப்பிய நாடுகளின் உள்விவகாரங்கள் குறித்து எலோன் மஸ்க் சமீபத்தில் வெளியிட்டுள்ள கருத்துகள் குறித்து கவலையடைவதாக நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் திங்களன்று தெரிவித்திருந்தார்.
செல்வாக்கு செலுத்த
சமூக ஊடகத்தில் கணிசமான செல்வாக்கு மற்றும் குறிப்பிடத்தக்க பொருளாதார வளங்களைக் கொண்ட ஒரு நபர் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் நேரடியாக தலையிடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதே கருத்தையே முன்னர், ஜேர்மனியும் பதிவு செய்திருந்தது. எலோன் மஸ்க் ஜேர்மனியின் பெடரல் தேர்தலில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறார் என்று கூறியது.
பிப்ரவரியில் நடக்கவிருக்கும் பெடரல் தேர்தலுக்கு முன்னதாக ஜேர்மனியின் தீவிர வலதுசாரி Alternative für Deutschland (AfD) கட்சிக்கு மஸ்க் பகிரங்கமாக ஆதரவு அளித்துள்ளார்.
அத்துடன், AfD கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான Alice Weidel என்பவருடன் தமது சமூக ஊடக நிறுவனத்தில் நேர்காணல் ஒன்றிற்கும் எலோன் மஸ்க் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |