அவசர நிலை பிரகடனம் செய்த கனேடிய மாகாணம்: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
மிக அரிதான மற்றும் மிகவும் தீவிரமான காட்டுத்தீ காரணமாக கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளனர்.
வீடுகளை விட்டு வெளியேறும் நிலை
குறித்த காட்டுத்தீயால் இதுவரை நோவா ஸ்கோடியா மாகாணத்தில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
@CP
காட்டுத்தீயால் மாகாணம் முழுக்க, கடுமையான புகைமூட்டம் காணப்படுகிறது. மட்டுமின்றி காட்டுத்தீயானது தீவிரமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஹாலிஃபாக்ஸ் தீயணைப்பு துணைத் தலைவர் டேவிட் மெல்ட்ரம் வார இறுதியில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், எங்கள் தீயணைப்பு வீரர்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் மிகவும் கடினமாக உழைத்தனர் என்று தெரிவித்துள்ளார்.
திங்களன்று Tantallon பகுதியில் காட்டுத்தீ தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் 14,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிறன்று இரவு முதல் ஹாலிஃபாக்ஸ் நகரில் அவசர நிலை அமுலில் உள்ளது. மேலும், எதிர்வரும் நாட்களில் மழைக்கும் வாய்ப்பு இல்லை என்பதால், நிலைமை மோசமடையவே வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோன்ற தீவிரமான காட்டுத்தீ
இதனிடையே, Yarmouth பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதாகவும் 6,270 ஹெக்டேர் நிலப்பரப்பில் தீ வியாபித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இரண்டு ஹெலிகொப்டர்கள், 6 வான் நீர் தொட்டிகள் உட்பட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
@CP
பொதுவாக மேற்கு கனடாவில் கோடையில் இதுபோன்ற காட்டுத்தீ வாடிக்கையே என்றே கூறுகின்றனர். ஆனால் நோவா ஸ்கோடியா மாகாணத்தை பொறுத்தமட்டில் மிக மிக அரிதாகவே இதுபோன்ற தீவிரமான காட்டுத்தீ ஏற்படும் என கூறப்படுகிறது.
கடைசியாக 1976ல் தீவிரமான காட்டுத்தீ நோவா ஸ்கோடியா மாகாணத்தை கதிகலங்க வைத்துள்ளதாக கூறுகின்றனர். சுமார் 10 மைல் அகலத்தில் ஏற்பட்ட தீயானது கிட்டத்தட்ட 13,000 ஹெக்டேர் நிலப்பரப்புகளை அப்போது சேதப்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஆல்பர்ட்டா மாகாணத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 1 மில்லியன் ஹெக்டேருக்கு மேல் எரிந்து சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.