மனித குலத்தை AI அழிக்கலாம்! 10% -க்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர் எச்சரிக்கை
AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மனித குலத்திற்கு காத்திருக்கும் பேராபத்து
அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது(AI) மனித குலத்தையே முற்றிலுமாக அழிக்கலாம் என்றும், அதற்கான வாய்ப்புகள் 10% -க்கும் அதிகமாக இருப்பதாக முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) அமைப்பின் மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எவன் ஹூபிங்கர் எச்சரித்துள்ளார்.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இருந்து விலகியவரும், ஓபன் ஏஐ(OpenAI) நிறுவனத்தில் பணியாற்றியவருமான ஜேக்கப் காக்சன்(Jacob Coxon) வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த எவன் ஹூபிங்கர்(Evan Hubinger) இவ்வாறு பதிலளித்துள்ளார்.
X தளத்தில் பதிலளித்துள்ள எவன் ஹூபிங்கர், தற்போதைய AI மாடல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மிகவும் குறைவு என்றாலும், எதிர்காலத்தில் இந்த AI தொழில்நுட்பங்கள் தங்களை தாங்களே மேம்படுத்திக் கொண்டு மிகப் பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரித்துள்ளார்.
மேலும் அவை மனித குலத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஆனால் இதில், AI மாடல்கள் எவ்வாறு மனித குலத்தை அழிக்கும் என்பதற்கான பிரத்யேக நிகழ்வுகளை அவர் விளக்கவில்லை.

விவாதங்களும், சந்தேகங்களும்
இந்த கருத்துகள் துறைசார் வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஐ.நா அமைப்பின் AI ஆலோசகரும், கணினி விஞ்ஞானியுமான டேம் வெண்டி ஹால், AI அச்சுறுத்தல் தொடர்பான இந்த சமூக வலைதள பதிவை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் நிறுவனங்கள் பங்குச் சந்தைக்குள் நுழையும் போது இத்தகைய விவகாரங்களை விளம்பர உத்தியாக பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இத்தகைய ஆபத்தான மதிப்பீடுகள் கொண்ட நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இங்கிலாந்து AI பாதுகாப்பு நிறுவனத்திடம், ஆந்த்ரோபிக் நிறுவனம் தங்களது அதிநவீன புதிய AI மாடலை ஆபத்து மதிப்பீட்டிற்கு வழங்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |