எண்ணங்களை படிக்க அனுமதித்தால் லட்சத்தில் பணம் வழங்கும் AI நிறுவனம்
Conduit என்ற AI நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கு பயிற்சியளிக்க உங்களது எண்ணங்களை படிக்கச் அனுமதித்தால் சுமார் ரூ.1 லட்சம் அளவிற்கு பணம் வழங்குகிறது.
எண்ணங்களை படிக்க அனுமதித்தால் பணம்
செயற்கை நுண்ணறிவு துறை அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. ChatGPT போன்ற செயலிகள் நாம் உரை வடிவிலோ, அல்லது குரல் வழியிலோ கொடுக்கும் கட்டளைக்கு ஏற்ப படம், வீடியோக்களை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றன.

ஆனால், Conduit என்ற AI ஸ்டார்ட்அப் நிறுவனம் அதற்கு ஒரு படி மேலே போய், உரை அல்லது குரல் வடிவிலான கட்டளைக்கு பதிலாக நமது எண்ணங்கள் மூலம் செயல்படும் செயலியை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளது.
இதே போன்ற முயற்சியில் எலான் மஸ்கின் neuralink நிறுவனம் ஈடுபட்டிருந்தாலும், அது மனிதனின் உடலுக்குள் சிப் ஒன்றை பொருத்தி அதன் மூலம் எண்ணங்களை வைத்து சாதனங்களை இயக்க வழி வகுக்கிறது.
ஆனால் Conduit நிறுவனம், உடலுக்குள் ஊடுருவாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எண்ணங்களை படிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மூலம் சாதனங்களை இயக்குவதை இலக்காக வைத்துள்ளது.
இதற்காக தனது அமைப்புகளுக்குத் தேவையான பயிற்சித் தரவுகளைச் சேகரிப்பதற்காக, அந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்து பணம் வழங்குகிறது.
இதில் பங்குபெற, அமெரிக்காவில் உள்ள Conduit அலுவலகத்திற்குச் சென்று, மின்முனைகள் பொருத்தப்பட்ட 4 பவுண்டு எடை கொண்ட தலைக்கவசத்தை அணிந்துகொண்டு, 2 மணி நேரம் செயற்கை நுண்ணறிவுடன் (AI) உரையாட வேண்டும்.
மேலும், விரல்களைப் பார்க்காமல் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இந்த அமர்வுகளின் போது, பங்கேற்பாளர்கள் ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரியுடன் உரையாடவும், கேட்கவும் பேசவும், படிக்கவும் அல்லது தட்டச்சு செய்யவும் கேட்டுக்கொள்ளப்படலாம்.
இதில், ஒரு அமர்வுக்கு 55 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.5,200) வரை பணம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் 32 அமர்வுகள் வரை பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. அதாவது 32 அமர்வுகளில் பங்குபெற்றால் 1760 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.1.67 லட்சம்) வரை பணம் பெற முடியும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |