1.06 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் AI - Gartner ஆய்வு
AI to Create 10.6M Jobs Worldwide by 2030: AI மூலம் ஒரு கோடிக்கும் மேல் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படவுள்ளதாக Gartner ஆய்வறிக்கை கூறுகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலக வேலைவாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி நிறுவனமான Gartner தெரிவித்துள்ளது.

1.06 கோடி புதிய வேலைவாய்ப்புகள்
அதன் சமீபத்திய அறிக்கையின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் உலகளவில் 1.06 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அதே நேரத்தில், சுமார் 89 லட்சம் வேலைகள் மறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்தமாக 17 லட்சம் வேலைவாய்ப்புகள் கூடுதலாக உருவாகும் என Gartner மதிப்பீடு செய்துள்ளது.
AI வளர்ச்சி வேலைகளை முழுமையாக மாற்றாது. மாறாக, பணியாளர்கள் செய்யும் பணியின் தன்மை, வேலை செய்யும் முறை மற்றும் பொறுப்புகளின் எல்லைகளை மாற்றும் என்று Gartner தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் AI-யை மனிதர்களுக்கு மாற்றாக அல்லாமல், உற்பத்தித் திறனை அதிகரிக்கும் கருவியாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
2026-ஆம் ஆண்டிலேயே பல நிறுவனங்கள் புதிய பணியிடங்களை உருவாக்குவதையும், ஆட்கள் நியமனத்தையும் தாமதப்படுத்தியுள்ளதாக Gartner குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக, 13 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் 22 லட்சம் வேலைகள் இழக்கப்பட்ட நிலையில், 16 லட்சம் புதிய வேலைகள் உருவாகியுள்ளன.
AI தாக்கம்
2030-க்குள் சுமார் 50 லட்சம் மக்கள் வேலை நியமன தாமதத்தின் தாக்கத்தை சந்திக்கக்கூடும் என்று அறிக்கை எச்சரிக்கிறது. AI தாக்கம் அனைத்து துறைகளிலும் ஒரே மாதிரியாக இருக்காது. உலகளவில் 43.55 கோடி பணியாளர்கள் தங்களின் வேலைகளில் புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இது மொத்த பணியாளர்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
சொத்து சார்ந்த (Asset-intensive) துறைகளில் மட்டும் 64 லட்சம் புதிய வேலைகள் உருவாகும் நிலையில், 60 லட்சம் வேலைகள் இழக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறையில் 4 லட்சம் வேலைகள் உருவாகவும், 9 லட்சம் வேலைகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. தொழில்நுட்பத் துறையில் 19 லட்சம் புதிய வேலைகள் உருவாகும் நிலையில், 4 லட்சம் வேலைகள் பாதிக்கப்படும் என Gartner தெரிவித்துள்ளது.
AI வளர்ச்சி சில வேலைகளை மாற்றினாலும், புதிய திறன்களைக் கொண்ட பணியாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும். எனவே எதிர்கால வேலைவாய்ப்பு சந்தையில் வெற்றி பெற தொடர்ச்சியான திறன் மேம்பாடே முக்கியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |