சக அதிகாரிகள் மூவரை சுட்டு கொன்று விமானப்படை அதிகாரி துணீகரம்
மலேசியாவின் கிழக்கு பகுதியில் சரவாக் மாகாண விமானப்படை தளத்தில் சக அதிகாரிகள் மூவரை சுட்டு கொன்று விட்டு விமானப்படை அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த விமானப்படை தளத்தில் உள்ள சோதனை சாவடி ஒன்றில் விமானப்படை அதிகாரிகள் பலர் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த விமானப்படை அதிகாரி ஒருவர் சோதனை சாவடிக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரிடம் இருந்து கடும் கோபத்துடன் துப்பாக்கியை பறித்தார்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. சத்தம் கேட்டு சோதனை சாவடியில் இருந்து வெளியே வந்த அதிகாரி ஒருவர், துப்பாக்கியை பறித்த தனது சக அதிகாரியை சமாதானம் செய்ய முற்பட்டார்.
ஆனால் அவரது வார்த்தைகளுக்கு செவி சாய்க்காத அந்த கோபக்கார அதிகாரி அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார்.
இதனை தொடர்ந்து சோதனை சாவடிக்கு சென்ற அந்த அதிகாரி அங்கிருந்த 2 அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதன் பின்னர் அந்த அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த கோர சம்பவத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே விமானப்படை அதிகாரி ஒருவர் சக அதிகாரிகளை சுட்டு கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.