பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமான நிறுவனங்களுக்கு மூடியதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மட்டும் 600 மில்லியன் டொலர் வரை இழப்பு ஏற்படலாம் என தகவல் கசிந்துள்ளது.
ஓராண்டுக்கு நீடிக்கும் என்றால்
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்றை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கைப்பற்றியதை அடுத்தே, இத்தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் தொடர்பில் தற்போது மூடப்பட்டிருக்கும் பாகிஸ்தான் வான்வெளி ஓராண்டுக்கு நீடிக்கும் என்றால், எரிபொருள் கட்டணம், பயண தூரம் உள்ளிட்ட காரணிகளால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மட்டும் 600 மில்லியன் டொலர் அதாவது ரூ 5070 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
பயண தூரம் அதிகரிப்பதால், அது பயணிகளையும் பாதிக்கும் என்றே ஏர் இந்தியா நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தத் தடை நீடிக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 591 மில்லியன் டொலர்களுக்கு மேல் இழப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கிறது.
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இராணுவ நடவடிக்கைகளுக்கு வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் அஞ்சுவதால் தங்களின் வான்வெளியை அந்த நாடு மூடியுள்ளது.
இந்தத் தடையானது மே மாதம் 23 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சேவைகளை அதிகமாக இயக்கும் இந்திய நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, ஏர் இந்தியா நிறுவனம் இந்திய அரசாங்கத்திடம் விகிதாசார மானியங்களைக் கேட்டுள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில், பாதிக்கப்பட்ட சர்வதேச விமானங்களுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான வழி என்றும் நிலைமை மேம்படும் போது மானியத்தை நீக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான
2023/24 நிதியாண்டில் மட்டும் 520 மில்லியன் டொலர் நிகர இழப்பைப் பதிவு செய்த டாடா குழுமத்திற்குச் சொந்தமான விமான நிறுவனத்தை தற்போதைய இந்தத் தடை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
ஏர் இந்தியா மட்டுமின்றி, இண்டிகோ நிறுவனமும் தங்களது சில விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் வழியாக வழக்கமாகப் பறக்கும் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விமானங்களை ஏர் இந்தியா இயக்குவதால், பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
டெல்லி-மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்திய விமானங்கள் தற்போது குறைந்தது ஒரு மணிநேரம் கூடுதலாக பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதுடன் அதிக எரிபொருளும் தேவைப்படும்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் டெல்லியிலிருந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்காவிற்கு சுமார் 1,200 விமானங்களை இயக்கியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |