ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை எழுப்பியுள்ள கேள்விகள்
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையின் முதல் கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கை, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
விமான விபத்துக்கான காரணம்
விசாரணையின் முதல் கட்ட அறிக்கையின்படி, விமான எஞ்சின்களுக்குச் செல்லும் எரிபொருள் தடைபட்டதாலேயே எஞ்சின்கள் செயலிழந்துள்ளன, அதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக, முதல் கேள்வி, எதனால் எஞ்சின்களுக்குச் செல்லும் எரிபொருள் தடைபட்டது என்பதாகும்.
அதாவது, எஞ்சின்களுக்குச் செல்லும் எரிபொருளை நிறுத்தவேண்டுமானால், யாராவது ஒரு விமானி அதற்கான லீவரை கையால் மேல் நோக்கித் தள்ளினால் மட்டுமே எரிபொருள் செல்வது தடைபடும்.
ஆக, விமானம் மேலெழும்பும்போது அடிப்படை அறிவுள்ள யாரும் எஞ்சினுக்கான எரிபொருளை நிறுத்தமாட்டார்கள் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.
ஆனால், விமானத்தின் கருப்புப் பெட்டியில் பதிவான விமானிகளின் உரையாடல்களில், ஒரு விமானி, ஏன் விமான எரிபொருளை நிறுத்தினாய் என கேட்கிறார்.
அதற்கு மற்ற விமானி, தான் அதைச் செய்யவில்லை என்கிறார். அப்படியானால், எப்படி அந்த எரிபொருள் லீவர் இயங்கியது. அது தானாக நடக்க சாத்தியமே இல்லை!
இன்னொரு விடயம், இப்படி ஏதேனும் அசம்பாவிதம் நிகழும்போது, Ram Air Turbine (RAT) என்னும் அமைப்பு இயக்கப்படுவதுண்டு.
அந்த அமைப்பு இயக்கப்பட்டதை, விசாரணை அறிக்கையும் உறுதி செய்துள்ளது.அதற்கு ஆதாரமாக CCTV காட்சிகளும் கிடைத்துள்ளன.
இந்த RAT அமைப்பு என்பது, ஒரு அவசரகால ஆற்றல் ஜெனரேட்டர் அமைப்பு ஆகும். அவசரகாலத்தில் விமானத்தை தரையிறக்க இந்த RAT அமைப்பு உதவி செய்யும்.
விடயம் என்னவென்றால், RAT அமைப்பு இயக்கப்பட்ட நிலையிலும், விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்படியானால், RAT அமைப்பு எதிர்பார்த்தபடி வேலை செய்யவில்லையா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.
ஆக, எதனால் எஞ்சின்களுக்குச் செல்லும் எரிபொருள் நிறுத்தப்பட்டது, அதற்கான லீவரை இழுத்தது யார், RAT அமைப்பு ஒழுங்காக செயல்படவில்லையா என எழுந்துள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், இது முதல் கட்ட விசாரணை அறிக்கைதான். இறுதி கட்ட விசாரணை இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலாவது 260 உயிர்களை பலிவாங்கிய விமான விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவருமா பார்க்கலாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |