ஒரே நாளில் 3,300 விமானங்கள் ரத்து... 10,000 விமானங்கள் தாமதம்: எழுந்த புதிய அச்சம்
அமெரிக்காவில் அரசாங்க முடக்கம் நீடிக்கும் நிலையில், ஞாயிறன்று மட்டும் ஒரே நாளில் 3300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 10,000 விமானங்கள் தாமதமாகியுள்ளது.
சரிவடையக் கூடும்
அரசாங்க முடக்கம் நீடிக்கும் என்றால், பயணிகளின் எண்ணிக்கையும் மெதுவாக சரிவடையக் கூடும் என்ற எச்சரிக்கையை போக்குவரத்து உயர் அதிகாரிகளால் விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டிய நிலையில், விமானங்களின் ரத்து எண்ணிக்கையும் வெளியானது.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அரசாங்க முடக்கம் 40 நாட்களை எட்டியுள்ளது. கடந்த வாரம் விமானப் போக்குவரத்தைக் குறைக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) உத்தரவிட்டதிலிருந்து பயண இடையூறு அதிகரித்து வருகிறது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஊதியமின்றி தொடர்ந்து பணியாற்றி வருவதால் சோர்வைக் காட்டி வேலைக்கு வர மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்டோபர் 1 ஆம் திகதி அரசாங்கம் முடக்கப்பட்டதில் இருந்து சுமார் 13,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ரத்து நீடிக்கலாம்
இந்த நிலையிலேயே, ஞாயிறன்று மட்டும் ஒரே நாளில் 3300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 10,000 விமானங்கள் தாமதமாகியுள்ளது. வெள்ளிக்கிழமை சுமார் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் விமான சேவைகள் 6 சதவீதமும், வியாழக்கிழமைக்குள் 8 சதவீதமும், வெள்ளிக்கிழமைக்குள் 10 சதவீதமும் குறைக்கப்பட உள்ளன.

இதனிடையே, அரசாங்க முடக்கம் கூடிய விரைவில் ஒரு ஒப்பந்தத்தை எட்டாவிட்டால், நவம்பர் 27 ஆம் திகதி Thanksgiving விடுமுறை வரையில் விமான சேவை ரத்து நீடிக்கலாம் என அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி எச்சரித்தார்.
பொதுவாகவே Thanksgiving விடுமுறையை ஒட்டிய காலம் அமெரிக்காவில் பயணத்திற்கான மிகவும் பரபரப்பான காலங்களில் ஒன்றாகும். 2024ல் மட்டும் Thanksgiving விடுமுறையை ஒட்டி 80 மில்லியன் அமெரிக்கர்கள் பயணம் செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |