7 மாதங்கள் விமான நிலையத்தில் வாழ்ந்த அகதி: கனடா அளித்துள்ள புது வாழ்வு
சிரியா நாட்டவர் ஒருவர் போருக்குத் தப்பி வெளியேறும் முயற்சியில் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 7 மாதங்கள் வாழும் ஒரு சூழலுக்குள்ளானார்.
யாரும் ஏற்றுக்கொள்ளாத ஒரு அகதி
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிவந்த Hassan Al Kontar, சிரியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்ததைத் தொடர்ந்து நாடற்றவரானார். அமீரகம் அவரது விசாவைப் புதுப்பிக்க மறுக்க, போர் நடக்கும் சிரியாவுக்குச் சென்று சிக்கிக்கொள்ள அவருக்கு மனமில்லை.
ஆகவே, சட்டவிரோதமாக அமீரகத்தில் தங்கியிருந்த Hassan 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மலேசியா நாடு அவருக்கு மூன்று மாத விசா வழங்கவே, அங்கு சென்றார் Hassan.
விசா காலம் முடிவடையவும், வேறெந்த நாடுகளுக்கும் செல்லமுடியாமல், சிரியாவுக்குச் செல்லவும் மனமில்லாமல் 7 மாதங்கள் விமான நிலையத்திலேயே வாழ்ந்துவந்த Hassan, தன் வாழ்க்கையை ஆவணப்படுத்தினார். சமுக ஊடகங்களில் அவரது வீடியோக்கள் வெளியாகின.
2018ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், மலேசிய அதிகாரிகள் Hassanஐக் கைது செய்து தடுப்புக் காவலில் அடைத்தார்கள். அவர் தடுப்புக்காவலில் கஷ்டங்கள் அனுபவித்து வந்த நிலையில், அவரது வீடியோக்கள் மூலம் கவனம் ஈர்க்கப்பட்ட கனேடியர்கள் சிலர் அவருக்காக அகதி நிலை கோரி விண்ணப்பித்துள்ளார்கள்.
எதிர்பாராமல் வந்த புதுவாழ்வு
கனடா அவருக்கு புகலிடம் வழங்க, ஒரே மாதத்தில், அதாவது, நவம்பர் 2018இல், வான்கூவரை வந்தடைந்தார் Hassan.
ஆனால், அதற்கு முன் தன் தந்தையை இழந்திருந்தார் அவர். பல கஷ்டங்களுக்குப் பிறகு கனடா அவருக்கு புது வாழ்வை வழங்க, கனடாவுடன் இணைந்து வாழும் முயற்சியில் ஈடுபட்டிருந்த Hassan, சிரியாவில் வாழ்ந்த தன் குடும்பத்தினர் எகிப்துக்கு குடிபெயர ஆவன செய்துவிட்டார்.
இந்நிலையில், நேற்று Hassanக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
This is a day that cost me a father, a destroyed homeland, prison, persecution, tears, blood, & fifteen years of being away from my loved ones.
— Hassan Al Kontar (@Kontar81) January 11, 2023
Wishing the same for every oppressed freedom fighter.
Wishing the same for every refugee in refugee camps.
Today is a day like no other pic.twitter.com/EDPelxvIcI
இனி பாஸ்போர்ட் ஒன்று கிடைத்ததும் தன் குடும்பத்தினரை சென்று காண விரும்பும் Hassan, அவர்களையும் கனடாவுக்கு அழைத்துவர முயற்சி செய்யப்போவதாக கூறியுள்ளார்.
பல நாடுகள் அகதிகளை காவலில் அடைத்து கஷ்டப்படுத்தியபோது, கனடா மக்கள் அன்புடனும் மரியாதையுடனும் தன்னை ஏற்றுக்கொண்டதை மகிழ்ச்சியுடன் அறிக்கை செய்கிறார் Hassan.
கனேடியர்கள் பலமுறை ‘நன்றி’ ‘வருந்துகிறேன் என்னும் வார்த்தைகளைக் கூறுகிறார்கள் என ஆச்சரியத்துடன் கூறுகிறார் Hassan.