இந்தியாவிற்கு வரும் அதிவேக இணைய சேவை - ஏர்டெல் உடன் கைகோர்த்த எலான் மஸ்க் நிறுவனம்
இந்தியாவில் இணைய சேவை வழங்க ஏர்டெல் நிறுவனத்துடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்டார்லிங்க் இணைய சேவை
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கும் Starlink என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
100க்கு மேற்பட்ட நாடுகளில் சாட்டிலைட் மூலம், ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்கி வரும் நிலையில், இந்தியாவிலும் இணையசேவை வழங்க அனுமதி கோரி, கடந்த 2022 ஆம் ஆண்டே விண்ணப்பித்திருந்தது.
இதற்கு மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்டார்லிங்க் ஏற்காமல் இருந்தது. ஆனால் சமீபத்தில், விதிகளை ஏற்று, ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஏர்டெல் ஒப்பந்தம்
இந்நிலையில், தற்போது முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் ஸ்டார்லிங்க் கையெழுத்திட்டுள்ளது.
இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஒப்பந்தம், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது.
ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குதல், வணிக வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் வழியாக ஸ்டார்லிங்க் சேவைகளை அளித்தல், பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களை இணைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட குறித்து ஏர்டெல் ஆராய்கிறது.
Airtel announces an agreement with @SpaceX to bring Starlink’s high-speed internet services to its customers in India. This is the first agreement to be signed in India, which is subject to SpaceX receiving its own authorizations to sell @Starlink in India. It enables Airtel and… pic.twitter.com/5MxViKxh9C
— Bharti Airtel (@airtelnews) March 11, 2025
இந்தியாவில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் சேவையை வழங்க ஸ்பேஸ்எக்ஸுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் இன்டர்நெட் இணைப்பை வழங்குவதற்கு உறுதியுடன் இருக்கிறோம்" என தெரிவித்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 6000 க்கும் மேற்பட்ட சாட்டிலைட்களை விண்ணில் ஏவியுள்ளது. உலகிலேயே அதிக செயற்கைகோள்கள் கொண்ட தனியார் நிறுவனம் என்ற சிறப்பை பெற்ற ஸ்பேஸ் எக்ஸ் அதன் மூலம் ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்கி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |