இங்கிலாந்து தொடரில் முகமது ஷமி சேர்க்கப்படாதது ஏன்? கில் கேப்டனானதன் காரணம் - அகர்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இங்கிலாந்து தொடருக்கு அறிவிக்கப்பட்ட அணி விபரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஏன் கில்?
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் ஆகிய தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அணித்தலைவராக சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் துணைத் தலைவராக ரிஷாப் பண்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கில்லினை அணித்தலைவராக தெரிவு செய்தது ஏன் என்று ஊடகத்தினர் தேர்வுக்குழு தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், "ஒன்று அல்லது இரண்டு சுற்றுப்பயணங்களுக்கு அணித்தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. நாங்கள் முன்னேற உதவும் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய விரும்புகிறோம்.
அதனை சரியான முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் நாங்கள் முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். அது எவ்வளவு கடினமாக இருக்கும். ஒருவேளை அவர் அந்த பணியில் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், அதனால்தான் அவரை தெரிவு செய்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
ஷமி இல்லாததன் காரணம்
நீண்ட காலமாக விளையாடாத ஷர்துல் தாக்கூரும், ஜஸ்பிரித் பும்ராவும் விளையாட உள்ள நிலையில், அனுபவ வீரரான முகமது ஷமிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பேசிய அஜித் அகர்கர் (Ajit Agarkar), "ஷமியை தவறவிட்டது துரதிர்ஷ்டவசமானது. அவர் உடற்தகுதி பெற முயற்சிக்கிறார். ஆனால் அவருக்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரால் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம்.
தற்போது பணிச்சுமை இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அவர் தற்போது உடற்தகுதியுடன் இல்லாவிட்டால், உடற்தகுதியுடன் இருக்கும் மற்றும் கிடைக்கக்கூடிய வீரர்களுடன் திட்டமிடுவோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |