விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் சொத்துமதிப்பு - NCP கட்சியின் எதிர்காலம்?
விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் சொத்துமதிப்பு மற்றும் NCP கட்சியின் எதிர்காலம் குறித்து காணலாம்.
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் சென்ற தனி விமானம், பாராமதி விமான நிலையத்தில் காலை 8;45 மணியளவில் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

பாராமதி விமான ஓடுதளத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

"சில நாட்களுக்கு முன்பாக, பிற கட்சியைச் சேர்ந்த சிலர் மூலம் எனக்கு ஒரு தகவல் வந்தது. இதன்படி பாஜகவை விட்டு விலக அஜித் பவார் விருப்பப்பட்டார் என்று எனக்குத் தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்" என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அஜித் பவாரின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த தேசிய வாத காங்கிரஸ் தொண்டர்கள், பிரேத பரிசோதனைக்காக அவரின் உடல் வைக்கப்பட்டுள்ள பாராமதி அரசு மருத்துவமனை குவிந்துள்ளனர்.
அஜித் பவாரின் மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று மகாராஷ்டிராவில் பொது விடுமுறை விடப்படுவதாகவும், 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
சொத்து மதிப்பு
1982 ஆம் ஆண்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக் குழு உறுப்பினராக அரசியலில் நுழைந்த அஜித் பவார், 8 முறை தொடர்ச்சியாக தற்போது வரை சட்டமன்ற உறுப்பினராகவும், பல முதலைவர்களின் அமைச்சரவைகளில் அமைச்சர் பதவி வகித்ததோடு, தற்போது துணை முதல்வராகவும் உள்ளார்.

2024 சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின் மூலம் அஜித் பவாரின் நிகர சொத்து மதிப்பு, ரூ.124 கோடி என மதிப்பிடப்படுகிறது. அவரின் மனைவி பெயரில் ரூ.78 கோடி சொத்து உள்ளது.
மஹாராஷ்டிராவில் அவரது பெயரில் 4 வீடுகளும், அவரின் மனைவி பெயரில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளும், ரூ.13.21 கோடி மதிப்பிலான விவசாய நிலமும், ரூ.37 கோடி மதிப்பிலான விவசாயம் சாராத நிலமும், சுமார் ரூ.11 கோடிமதிப்புள்ள வணிகக் கட்டிடமும் உள்ளது.
டொயோட்டா கேம்ரி மற்றும் ஹோண்டா CR-V ஆகிய கார்கள் மற்றும் விவசாயம், வணிக நோக்கத்திற்காக 3 டிரக் மற்றும் ஒரு டிராக்டரை வைத்துள்ளார்.
மேலும், ரூ.21.39 கோடி கடன்கள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் பினாமி சொத்து குவிப்பு வழக்கில் அஜித் பவார் மற்றும் குடும்பத்திற்கு சொந்தமான ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அதன் பின்னர் அஜித் பவார் முறைகேடாக சொத்து சேர்க்கவில்லை என கூறி சொத்துக்களை விடுவித்தது.
தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம்
2023 ஆம் ஆண்டு தனது சித்தப்பாவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி, பாஜக ஆதரவுடன் முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு ஆதரவளித்து துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

அதன் பிறகு, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்தையும் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றினார்.

தற்போது 41 எம்எல்ஏகளுடன் மகா யுதி கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைமை யார், யார் துணை முதல்வராக பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்சி இரண்டாக உடைந்த பின்னர், சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் தனது சித்தப்பா சரத் பவாரின் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். இதனால் மீண்டும் கட்சி ஒன்று சேருமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
கட்சி ஒன்றிணைந்தால் கட்சியின் டெல்லி முகமாக உள்ள சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே கட்சியை வழிநடத்தலாம்.

அவ்வாறு கட்சி மீண்டும் ஒன்றிணைந்து, மகா யுதி கூட்டணியில் இருந்து விலகினால், மைனாரிட்டி அரசாக மாறும். அப்படியானால் பாஜக வேறு கூட்டணியை தேடவோ அல்லது முன்னதாகவோ தேர்தலை சந்திக்கும் நிலை வரலாம்.

ராஜ்யசபா எம்.பியாக உள்ள அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா அல்லது மூத்த மகன் பார்த் பவார் கட்சியை வழிநடத்தலாம். பார்த் பவார் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கட்சியின் மூத்த தலைவர்களான சுனில் தட்கரே அல்லது பிரஃபுல் படேலுக்கும் வாய்ப்புள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |