முதலில் இலங்கை தகுதி பெறுமா பாருங்க! அர்ஜுன ரணதுங்காவுக்கு பதிலடி கொடுத்த இந்திய முன்னாள் வீரர்
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, அர்ஜுன் ரணதுங்காவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஷிகார் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் உள்ளதால், இந்திய அணியின் முக்கிய வீரர்களான கோஹ்லி, ரோகித்சர்மா போன்றோர் இங்கிலாந்து தொடரில் விளையாடவுள்ளனர்.
இலங்கை தொடருக்காக இந்திய அணி இளம் வீரர்கள் கொண்ட பட்டாளத்தை அனுப்பியுள்ளது.
அதில் ஷிகார் தவான், இஷான் கிஷன், போன்றோர் உள்ளனர். இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரரான அர்ஜுன் ரணதுங்கா, சீனியர் வீரர்களை தவிர்த்து இளம் வீரர்களை இலங்கை அணிக்கு அனுப்பி வைத்தது சரியல்ல என்றும், எங்களை அவமதிக்கும் வண்ணம் இது அமைந்திருக்கிறது எனவும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியில் விளையாட போகும் 11 வீரர்களை ஒன்றிணைத்து அவர்கள் மொத்தமாக விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டிகளை கணக்கிட்டால் இறுதியில் 471 ஒருநாள் போட்டிகள் வரும்.
தற்போது இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணியில் விளையாட போகும் 11 வீரர்களின் மொத்த ஒருநாள் போட்டிகளை இதேபோல் கணக்கிட்டு பார்த்தால் எவ்வளவு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறிய அவர், மேலும், இலங்கை அணி உலக கோப்பை டி20 தொடரில் விளையாட முதல் தகுதிச்சுற்றில் விளையாடி தகுதி பெற வேண்டும். மறுமுனையில் இலங்கையை விட சிறிய அணியான ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே உலக கோப்பை டி20 தொடரில் விளையாட தகுதி பெற்றுவிட்டது.
இறுதியில் இலங்கை அணி உலக கோப்பை டி20 தொடரில் விளையாட தகுதி பெறுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.