இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறு - வெளிப்படையாக கருத்து சொன்ன முன்னாள் வீரர்
தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியடைந்து 2-0 என தொடரை இழந்த இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்து தொடரை முழுவதுமாக இழந்தது. இதனால் இந்திய அணி மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய பிறகு நான்கு மாற்றங்களுடன் 3வது போட்டியில் களம் இறங்கியது. இதில் வெங்கடேஷ் ஐயர் வெளியே அமர்த்தப்பட்டு, சூர்யகுமார் யாதவ் ஆடும் லெவனில் தேர்வானார். இந்நிலையில் மூன்றாவது போட்டியில் வெங்கடேஷ் ஐயர் நீக்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம் செய்துள்ளார்.
வெங்கடேஷ் ஐயர் புதிதாக இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். வெறும் இரண்டு போட்டிகளில் மட்டும் வாய்ப்பு கொடுத்து விட்டு மூன்றாவது போட்டியில் இளம் வீரரை வெளியில் அமர்த்துவது முற்றிலும் தவறாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக ஒரு போட்டியில் மட்டுமே பந்துவீச வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அவரது முழு திறமையை வெளிப்படுத்த இன்னும் கூடுதல் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் இப்படி அரைகுறையாக வாய்ப்புகள் கொடுத்தால் அடுத்தடுத்த தொடர்களில் அவரால் இடம்பெறுவது கடினமான செயலாக மாறிவிடும். இது இந்திய அணியின் எதிர்காலத்தையும் பாதிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.