அக்கி நோய் ஏற்பட காரணங்களும் சிகிச்சையும்!
சின்னம்மை நோயின் விட்ட குறை தொட்ட குறை தான் "அக்கி"
இளம் வயதில் வேரிசெல்லா சோஸ்டர் வைரஸின் தொற்றால் ஏற்படுவது சிக்கன் பாக்ஸ் எனும் சின்னம்மை ஆகும்.
இதை கொப்புளிப்பான் அம்மை என்று அழைக்கிறோம்.
உடல் முழுவதும் எந்த பாரபட்சமுமின்றி கொப்புளம் கொப்புளமாக ஏற்படும் அம்மை இது.
கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே குழந்தையாக இருக்கும் போது ஒருமுறையும் மேனிலைப் பள்ளி வகுப்புகளில் அல்லது கல்லூரி காலங்களில் மறுமுறை சின்னம்மை தொற்று ஏற்படலாம்.
இவ்வாறு சின்னம்மை ஏற்படுத்திய வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ்களில் ஒரு சிறு பகுதி நமது தண்டுவட நரம்பு மண்டலத்தில் அமைதியாக ஆழ்ந்த கும்பகர்ண துயில் நிலைக்குச் சென்று விடுகிறது. இதை டார்மண்ட் ஸ்டேட் என்று அழைக்கிறோம்.
இத்தகையோருக்கு அகவை அதிகரிக்கும் போது தூங்கிக் கொண்டிருந்த வைரஸ் 2.0 வெர்சனாக துயில் களைந்து வெளியே வந்து உருவாக்கும் நோய் தான் "அக்கி" ( ஹெர்பஸ் சோஸ்டர்).
தண்டுவட நரம்பு மண்டலத்தின் பின்புற நரம்புக் கச்சை "நீண்ட கால வலி" உணர்வைத் தூண்டுவதாக இருப்பதால்
இந்த நோய் நிலை ஏற்படும் போது அதீத வலி ஏற்படுகிறது.
பாதிக்கப்பட்ட நரம்பின் செயல்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் செந்நிறப் படை தோன்றி பிறகு 3 முதல் 5 நாட்களில் அந்த இடங்களில் படத்தில் காணுவது போல கொப்புளங்கள் தோன்றும்.
அந்த கொப்புளங்கள் ( சின்னம்மை போன்றே) காய்ந்து சருகாகும். இதற்கு 2 முதல் 4 வாரங்கள் எடுத்துக் கொள்ளும். பிறகு பாதிக்கப்பட்ட இடத்தில் சருமம் கருமையாகவோ அல்லது தழும்புடனோ ஆறும்.
பெரும்பாலும் வயிற்றுப் பகுதி, நெஞ்சுப்பகுதி, முதுகுப்பகுதி , முகம் ஆகிய இடங்களில் அக்கி தோன்றும்.
அக்கி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அக்கிக்கு பின்பான தீவிர நரம்பு வலி ஏற்படலாம். இதை போஸ்ட் ஹெர்படிக் நியூரால்ஜியா என்று அழைக்கிறோம்.
பாதிக்கப்பட்ட இடங்களில் தீவிர வலி , அரிப்பு போன்றவை பெரும்பாலும் மூன்று மாதங்கள் வரை தொடரும். சில நேரங்களில் பல மாதங்கள் முதல் வருடங்கள் வரை நீடிக்கலாம்.
வெகு சிலருக்கு இந்த அக்கி கண் பார்வைக்கு உதவும் நரம்பில் தாக்குதல் உண்டாக்கி கண் பார்வைக் கோளாறை உருவாக்கலாம்.
இன்னும் அரிதாக இந்தத் தொற்றானது உடல் முழுவதும் பரவி குறிப்பாக மூளைக்கும் தண்டுவட நரம்பு மண்டலத்துக்கும் பரவி மூளை காய்ச்சலை ஏற்படுத்தலாம்.
நுரையீரலையும் கல்லீரலையும் தாக்கி அழற்சியை உருவாக்கலாம்.
அக்கி தொற்று ஏற்பட்ட சருமத்தில் பாக்டீரியா கிருமித் தொற்று ஏற்பட்டு சலம் வைக்கலாம்.
அக்கி ஏற்பட்டவர்களுடன் இதுவரை சின்னம்மை தொற்று ஏற்படாதவர்கள் நேரடி தொடர்பில் இருக்கும் போது சின்னம்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது
அக்கி ஏற்பட்டவர்கள் அந்த கொப்புளங்கள் காய்ந்து சருகாகும் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது பிறருக்கு நோய் பரவாமல் தடுக்கும் செயலாகும்.
பொதுவாக அகவை கூடக்கூட அக்கி ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இன்னும் அடங்காத நீரிழிவு புற்று நோய் மருத்துவம் வேறு ஆட்டோ இம்யூன் நோய்களுக்கு ஸ்டீராய்டு சிகிச்சையில் இருப்பவர்கள் மந்தமான எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு அக்கி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இவர்களுக்கு தற்போது "சிங்க்ரிக்ஸ்" எனும் தடுப்பூசி சந்தையில் கிடைக்கிறது.
இரண்டு முதல் ஆறு மாத இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்வது அக்கி வரும் வாய்ப்பை 90% குறைக்கிறது. இந்த எதிர்ப்பு சக்தி ஏழு வருடங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு இந்த எதிர்ப்பு சக்தி 68 முதல் 91% என்ற அளவில் கிடைக்கிறது.
சிங்க்ரிக்ஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூபாய் பத்தாயிரம் என்ற அளவில் தற்போது இருப்பது எளியோருக்கு எட்டாத நிலையில் இருக்கிறது. எனினும் எதிர்காலத்தில் இன்னும் விலை குறையும் போது நுகர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சின்னம்மை ஏற்படாமல் தடுக்கும் வேரிசெல்லா தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்குவது மூலம் சின்னம்மை ஏற்படும் வாய்ப்பையும் அதன் மூலம் எதிர்காலத்தில் அக்கி ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கலாம்.
சின்னம்மை ஏற்படும் போது மருத்துவரை அணுகி அதற்குரிய வைரஸ் கொல்லி மருத்துவ சிகிச்சையை முறையாகப் பெறும் போது வைரஸ்களை அழிப்பதால் பின்னர் அக்கி ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
சிங்க்ரிக்ஸ் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் அக்கி ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பது.
ஐம்பது வயதுக்கு மேல் உள்ள முதியோர் , அடங்காத நீரிழிவு நோய் இருப்பவர்கள் , எதிர்ப்பு சக்தி குன்றியோர் ஆகியோருக்கு இந்த தடுப்பூசி பலன் தரும்.
ஒருமுறை அக்கி ஏற்பட்டவருக்கு மீண்டும் அக்கி ஏற்படலாம். எனவே அக்கி ஏற்படும் போது அதற்குரிய முறையான வைரஸ் கொல்லி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் மறுமுறை அக்கி ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்.
போஸ்ட் ஹெர்படிக் நியூரால்ஜியா இருப்பவர்கள் நரம்பியல் சிறப்பு நிபுணரின் சிகிச்சை பெற்று வலி நிவாரணிகளையும் நரம்பின் தூண்டலை சாந்தப்படுத்தும் மருந்துகளையும் உட்கொண்டு வலியைக் குறைத்துக் கொள்ள முடியும்.
சின்னம்மைக்கும் அக்கிக்கும் மருத்துவரை சந்தித்து முறையான சிகிச்சை அளிப்பது சிறந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |