ரொனால்டோ உடனான 173 மில்லியன் ஒப்பந்தம்: சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப் வரலாறு என்ன?
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நஸர் கிளப்புடனான தனது புதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சவுதி அரேபியாவின் அல் நர் கிளப்பை பற்றிய தகவல் இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ளது.
அல் நஸர் அணியுடன் கைகோர்த்த ரொனால்டோ
கத்தார் உலக கோப்பை போட்டிகள் பிறகு மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல் நஸருடன் 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ இதற்கு முன்னதாக விளையாடிய மான்செஸ்டர் அணிக்காக 236 போட்டிகளில் 103 கோல்கள் அடித்திருந்தார். மேலும் 2009 - 2018 காலகட்டத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக 292 போட்டிகளில் 311 கோல்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 37 வயதாகும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட உள்ள ஆறாவது அணி அல் நஸர் ஆகும்.
அல் நஸர் வரலாறு
சவுதி அரேபியாவின் மிகவும் வெற்றிகரமான கால்பந்து அணியாக பார்க்கப்படும் அல் நஸர் கடந்த 1955ம் ஆண்டு நிறுவப்பட்டது.
Marca
சவுதி அரேபியாவின் வெற்றிகரமான கால்பந்து கிளப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் அல் நஸர், சவுதி புரோ லீக் (Saudi Pro League) தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகிறது.
அல் நஸர் அணி இதுவரை ஒன்பது லீக் பட்டங்கள், மூன்று கிரவுன் பிரின்ஸ் கோப்பைகள், மூன்று ஃபெடரேஷன் கோப்பைகள் மற்றும் இரண்டு சவுதி சூப்பர் கோப்பைகளை வென்றுள்ளது.
சுமார் 25000 ரசிகர்கள் அமர்ந்து பார்வையிடக்கூடிய மிர்சூல்(Mrsool) மைதானத்தில் அல் நஸர் கால்பந்து அணி தங்களது சொந்த வீட்டு விளையாட்டுகளை(home games ) விளையாடுகிறார்கள்.
இந்த அணி முன்னாள் லியோன் மேலாளர் ரூடி கார்சியாவால்(Rudi Garci) நிர்வகிக்கப்படுகிறது, இவர் இதற்கு முன்பு ரோமா மற்றும் லில்லை நிர்வகித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிளப்பை இத்தாலியுடன் உலகக் கோப்பை வென்ற கேப்டனாக ஃபேபியோ கன்னவாரோ-வால் முன்னர் நிர்வகிக்கப்பட்டது. மேலும் அல் நஸர் கிளப்பில் விளையாடும் குறிப்பிடத்தக்க வீரர் முன்னாள் அர்செனல் கோல்கீப்பர் டேவிட் ஓஸ்பினா ஆவார், இவர் இந்த கோடையில் அல் நஸர் அணியுடன் இணைந்துள்ளார்.