ஆஷஸில் சாதனை சதம் விளாசிய வீரர்: முதல் நாளில் 326 ஓட்டங்கள் குவித்த அவுஸ்திரேலியா
அடிலெய்டில் தொடங்கிய ஆஷஸ் 3வது டெஸ்டில் அலெக்ஸ் கேரி சதம் விளாசினார்.
உஸ்மான் கவாஜா அரைசதம்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஆஷஸ் டெஸ்ட் அடிலெய்டில் தொடங்கியுள்ளது. 
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், உஸ்மான் கவாஜா நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அலெக்ஸ் கேரியும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அணியின் ஸ்கோர் 185 ஆக உயர்ந்தபோது உஸ்மான் கவாஜா (Usman Khawaja) 10 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அலெக்ஸ் கேரி சதம்
எனினும், அணியின் ஸ்கோரை உயர்த்திய அலெக்ஸ் கேரி (Alex Carey) தனது 3வது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார்.
இதன்மூலம் ஆஷஸ் டெஸ்ட்களில் இயான் ஹீலி, ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் பிராட் ஹாடின் ஆகியோருக்கு அடுத்தபடியாக சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார். 
அலெக்ஸ் கேரி 143 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) 33 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
அவுஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஜோப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) 3 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் மற்றும் வில் ஜேக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |